பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு ஏமாற்றம்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் டேபிள் டென்னிஸ் லீக் ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்தனர். மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் தொடக்கவிழா மட்டும் நடக்க, நேற்று முதல் போட்டிகள் தொடங்கின. இந்திய வீராங்கனைகள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு  முதல் லீக் சுற்று ஆட்டங்களில் நேற்று களம் கண்டனர். ஏ பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பவினாபென் படேல், சீன வீராங்கனை ஸூ யிங்குடன் மோதினார். இப்போட்டியில் ஸூ யிங் 11-3, 11-9, 11-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். டி பிரிவில் இந்தியாவின் சோனல்பென் மனுபாய் படேலுடன் மோதிய சீன வீராங்கனை லீ கியான் 9-11, 11-3, 15-17, 11-7, 11-4 என்ற செட் கணக்கில்  போராடி வென்றார். முதல் நாள் ஏமாற்றம் அளித்தாலும், தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது லீக் சுற்றில் பவினா, இங்கிலாந்து வீராங்கனை மேகன் ஷக்லெடன் உடனும், சோனல்பென் கொரிய வீராங்கனை மீ லீயுடனும் களம் காண உள்ளனர். ஆஸி. ஆதிக்கம்: முதல் நாளான நேற்றே பதக்க வேட்டையை தொடங்கிய ஆஸ்திரேலியா 6 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் 8 பதக்கங்களை பெற்று 2வது இடத்திலும், ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி அணி 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் 6 பதக்கங்களை வென்று 3வது இடத்தையும் பிடித்துள்ளன….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்