பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் வேளாண் அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி, டிச.16: பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாரம்பரிய காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவிலான விருதுகள்
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை இணையதளத்திலும், பொள்ளாச்சி வடக்கு வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பங்களை விவசாயிகள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வட்டார அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன்பின், மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், விண்ணப்பங்கள் சமர்பித்த விவசாயிகளின் தோட்டங்களை ஆய்வு செய்து விருதுக்கான விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பாரம்பரிய காய்கறி இனங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளுக்கும் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண் வளமேம்பாடு மற்றும் அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில், விருது பெற விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். மாவட்ட அளவில் விருதுக்கு தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும், 2வது பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை