Sunday, June 30, 2024
Home » பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்

பாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்

by kannappan

பாமணி, மன்னார்குடிபூவுலகாம் ஈங்கும் பாதாள முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய்’’ என்று வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில் பாடியுள்ள தலம் இன்று பாமணி என பொதுமக்களால் வழங்கப்படுகிறது காமதேனு பூசித்த லிங்கம் சுக்ல முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வந்தார். ஒருசமயம் காமதேனு வனத்துக்குச் சென்று பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பூசை செய்ய பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார் வருந்திய காமதேனு ஓடிச் சென்று அங்கிருந்த சிவலிங்கத்தின்மீது முட்டி தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்த, வடக்கு வீதியிலுள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் இங்கு காட்சித் தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியதால் மூலத் திருமேனி மூன்று வடுக்களையுடையதாய் – முப்பிரிவாகக் காட்சி தந்தது. சுயம்பு லிங்கமாதலால் முப்பிரிவாகப் பிளந்த லிங்கம் செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.பலவான் யார்?ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் பலசாலி என்ற போட்டி உண்டானது. ஆதிசேஷன் பலம் பொருந்திய தன் தலையால் மேருமலையை அழுத்தி பிடித்து கொண்டு, உடலால் மலையை சுற்றி நகரவொட்டாமல் செய்தது. வாயு பகவான் மலையை அசைக்க முடியாமல் தோற்றது. இந்த கோபத்தால் வாயு காற்றை அடக்கியது. சகல ஜீவராசிகளும் காற்றின்றி தவித்தன. தேவர்கள் அனைவரும் வேண்ட போட்டி மீண்டும் நடந்தது. தேவர்கள் ஆதிசேஷனின் வலிமையை சற்று குறைக்கக் கேட்க, மூன்று தலைகளை மட்டும் தளர்த்தியது. வாயு மூன்று சிகரங்களை மட்டும் பெயர்த்தது. தான் தோற்றதால், மனவேதனை அடைந்த ஆதிசேஷன், மனநிம்மதிக்காக சிவலிங்கம் ஒன்றை புற்வடிவாக அமைத்தது.பாதாளத்திலிருந்து வந்த தனஞ்செயன் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். இவர்கள் துணைவர ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்திலிருந்து வந்ததால் இத்தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயர் உண்டானது. மனிதமுகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷன் வந்து பூஜை செய்ததால் சிவானுக்கிரகம் பெற்றது. சம்பந்தர் பாட்டில் ‘‘பாதாளேச்சுரம்’’ என்று குறிக்கப்படும் பெயர், பிற்காலத்தில் சுந்தரர் தேவாரத்திலேயே ‘‘பாம்பணி’’ என்று மாறி வருகிறது.வனத்தில் இருந்த இந்த மூலவர் சுவாமியின் மேல் பாம்புகள் அடிக்கடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. பாம்புகள் ஊர்ந்ததால் அவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்னும் பொருள்பட பாம்பணி நாதர் என்று மக்கள் அழைத்தனர். அதன் காரணமாக இந்த ஊர் பாம்பணி என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி பாமணி என்ற பெயரைப் பெற்றது. பாம்பணி நாதரை வணங்க ஆதிசேஷன் தனஞ்செய முனிவராய் வடிவத்தினை மேற்கொண்டு வந்து இறைவனை வழிபட்ட நாள் ஐப்பசி முதல் நாளாகும் இங்கு வந்தபோது எங்கும் லிங்கத் திருமேனிகளாய் தோன்றின.இறைவனின் அருள் விளையாடலை நினைத்து திகைத்து கால் தரையில் படாமல் சுவாமியை தொட்டு வணங்க முடிவெடுத்தார் அதற்கு வசதியாக இடுப்பிற்குக் கீழே பாம்பு வடிவத்தையும், இடுப்புக்கு மேலே மனித வடிவத்தையும் கொண்டு மூலவரை வணங்கினார். இறைவன் மகிழ்ந்து அவருக்கு வந்து காட்சி நல்கினார். அதே உருவத்தில் இருந்து அவருடைய பக்தர்களை ராகு, கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி வழங்கும்படி இறைவன் நியமனம் செய்தார். இறை ஆணையை சிரமேற்கொண்டு அப்பணியைச் செவ்வனே செய்யத் தொடங்கினார். அதன் காரணமாக இத்தலத்தில் பரிகாரம் செய்யும்போது சர்ப்ப தோஷங்கள் நீங்கி உரிய பலன் மக்களுக்கு கிடைக்கின்றன என்கின்றனர்.வேறு எங்கும் தரிசிக்க முடியாத தனஞ்செயன் எனப்படும் ஆதிசேஷனுக்கு இங்கே தனி சந்நதி உள்ளது. ஆதிசேஷன் தன் அஷ்டநாகங்களுடன் வந்ததால் அவரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், காலசர்ப்பதோஷம் ஏற்பட்டவர்கள் அவை நீங்கி பலனடைவர் எனப்படுகிறது. நாக தோஷ நிவர்த்தித்தலம் தனஞ்செயர் ஊர்ந்து வந்து இறைவனை வழிபட்ட நாள் ஐப்பசி முதல் நாள் ஆகும் அந்நாளில் நம் உணவு போலவே சோறு, குழம்பு, காய்கறி வகைகள், வடை, பாயசம் சமைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நிவேதித்தால் தோஷம் நிவர்த்தியாகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. பச்சை திராட்சை, மாங்கனியும், மாம்பழச் சாறும் இங்குச் சிறப்பு நிவேதனமாக கொள்ளப்படுகிறது. இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருட்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.தேவாரப் பாடல்பெற்ற இத்திருத்தலத்தில் இறைவர் திருப்பெயர் நாகநாதசுவாமி, சர்ப்ப புரீஸ்வரர் பாம்பணிநாதர் என்றெல்லாம் வணங்கப்படுகிறது. மாமரம் தலமரமாகவும் பிரம்ம தீர்த்தம், நாக தீர்த்தம், பசு தீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ர தீர்த்தம் என்னும் பஞ்ச தீர்த்தம் உடைய கோயிலின் நின்றகோல அம்பாள் அமிர்தநாயகி என வணங்கப்படுகிறாள். முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தால் வலப்பால் அமிர்தநாயகி அம்பாள் சந்நதி உள்ளது. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் கருவறையில் லிங்க வடிவில் இறைவன் காட்சி தருகிறார். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவகிரகம், நால்வர், சந்திரன் சந்நதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் நடராஜ சபை உள்ளது. வெளிப்பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் தட்சி ணாமூர்த்தி, அண்ணாமலையார் பிரம்மா, துர்கை ஆகியோர் இருந்து அருளுகின்றனர். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. தேவாரக்கால திருக்கோயிலான இக்கோயில் சோழர் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டு மக்களின் வழிபாட்டில் இருந்து சென்ற நூற்றாண்டில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.தினமும் நான்கு கால வழிபாடு நடைபெறுகிறது.சித்திரை வருடப்பிறப்பு, சித்திராப்பௌர்ணமி.வைகாசி விசாகப் பிரம்மோற்சவம், ஆனித்திருமஞ்சனம்,ஆடிப்பூரம், ஆடித்திருமஞ்சனம், ஆவணி மூலம்,புரட்டாசி நவராத்திரி, விஜயதசமி,ஐப்பசி தனஞ்செயன் நிறைமணிக் காட்சி, அன்னாபிஷேகம்,திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரங்கள், கடைசி சோமவாரத்தன்று 108 கலசாபிஷேகம்,தனுர்மாதம் ஆருத்ரா, தைப்பொங்கல், தைப்பூசத்தில் பாமிணி ஆற்றில் தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் உட்பட சிவன் கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன.மன்னார்குடியிலிருந்து 2½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாமணிக்குச் சென்று, அங்குள்ள உரத்தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். வித்தியாசமான பூஜைகள் வரலாறு உடைய இத்திருக்கோயில் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்கு திறந்திருக்கும். சென்று தரிசித்து வாருங்களேன்.தொகுப்பு: இரா.இரகுநாதன்

You may also like

Leave a Comment

three + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi