பாப்பாகோவில் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராகி வரும் நெல் வயலில் பன்றிகள் அட்டகாசம்-உடனடி நடவடிக்கை இல்லாவிட்டால் சம்பா சாகுபடியும் பாதிக்கும்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் குடிநெய்வேலி, நரியங்குடி, கருவேலி, ஒரத்து£ர் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். கோ 51 ரக நெல்லை நடவு மற்றும் நேரடி விதைப்பின் மூலம் சாகுபடி செய்துள்ளனர்.இந்த நெற்பயிர் 80 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை வளர்ந்த பயிர்கள் ஆகும். கதிர் விட்டு முற்றும் தருவாயில் உள்ளது. இந்த நெற்பயிர்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயராகிவிடும்.இந்நிலையில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை இரவு நேரத்தில் பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் சாய்ந்தும், நெல் மணிகள் கொட்டியும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பன்றிகளின் தொல்லையில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க வேளாண்மை துறை, வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம், காமராஜ் ஆகியோர் கூறியதாவது:மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நடப்பு ஆண்டிற்கு முன்னதாகவே முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டார். இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு குறுவை சாகுபடி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. குறுவை பயிர் அறுவடை செய்யும் காலங்களில் இயற்கை இடர்பாடு ஏற்படும். ஆனால் அதுவும் இந்த ஆண்டு இல்லாத காரணத்தால் பயிர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி நல்ல முறையில் வளர்ந்துள்ளது. இன்னும் 20 நாட்களில் எங்கள் பகுதியில் அறுவடை தொடங்கி விடும். ஆனால் வயல்களில் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.மழை போன்ற இயற்கை இடர்பாடுகளில் சிக்கி இதுநாள் வரை விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தோம். ஆனால் தற்போது பன்றிகளால் இந்தாண்டு நஷ்டத்தை சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 100 மூட்டை அறுவடை செய்ய வேண்டிய விளைநிலத்தில் பன்றிகளின் அட்டகாசத்தால் தற்போது 25 அல்லது 30 மூட்டை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு பயிர் பாதிப்பால் வாங்கிய கடனில் இருந்து எங்களால் மீளமுடியவில்லை. இந்நிலையில் மீண்டும் கடன் பெற்று ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்துள்ளோம். செலவு செய்த தொகையாவது கிடைக்குமா என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை துறை அலுவலர்களிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எங்கள் பகுதியை வந்து கூட பார்க்கவில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வனத்துறைக்கு உரிய உத்தரவை பிறப்பித்து பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை அறுவடை முடிந்தவுடன் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி விடுவோம். பன்றிகளை பிடிக்கவில்லை என்றால் சம்பா பயிர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு