பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

தஞ்சாவூர், மே 16: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய வாலிபரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவல் சரக பகுதிக்கு உட்பட்ட நல்ல வன்னியன் குடிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி மீனா (51 ), ராராமுத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குமரேசன் ( 73 ), கத்தரிநத்தம் வடக்கு குடியானத் தெருவை சேர்ந்த ராமாமிர்தம் மகன் கலியமூர்த்தி (51), தளவாபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை அலுவலர் மனோகரன் ( 62) உள்ளிட்டோரது வீடுகளில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து மீனா, குமரேசன், கலியமூர்த்தி, மனோகரன் உள்ளிட்டோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் ஆலோசனைப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், கோவிந்தராஜ் மற்றும் காவலர்கள் விஜயகுமார், பிரபாகரன், வினோத்குமார், சந்தோஷ் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும், செல்போன் உரையாடலில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும் தனிப்படை போலீசார் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தொடர் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இந்த நிலையில் அம்மாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்தனர். விசாரணையில் கரூர் மாவட்டம், வீரராக்கியம், சின்னப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மகன் நவீன் (எ) குமரவேல் ( 24 ) என்பதும் அவர் அம்மாப்பேட்டை காவல் சரக பகுதிகளில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் என தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு செல்போன்கள், 40 கிராம் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குமரவேலை கைது செய்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட குமரவேல் மீது தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல் நிலையம், திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல்நிலையம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பலவேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்