பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அளவை குறைக்க நடவடிக்கை இசக்கிசுப்பையா எம்எல்ஏ வேண்டுகோள்

விகேபுரம்,அக்.15: பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 1650 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

எனவே, தாமிரபரணி ஆற்றில் திறந்து விடும் நீரின் அளவை விவசாயிகளின் நலன் கருதி குறைத்து பாபநாசம் அணையில் நீரினை சேமிக்க வேண்டும் என்று என்கேஎஸ்கே மற்றும் நதியுன்னி கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மாரிமுத்து இசக்கி சுப்பையா எம்எல்ஏவிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று இசக்கி சுப்பையா எம்எல்ஏ தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பனிடம் விவசாயிகளின் நலன் கருதி தாமிரபரணியில் தண்ணீர் திறந்து விடும் அளவினை குறைத்து பாபநாசம் அணையில் நீரினை சேமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து இன்று (15ம் தேதி) முதல் தாமிரபரணி ஆற்றில் விடும் தண்ணீரின் அளவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு