பாதுகாப்பை மீறி செயல்பட்டு பவர்புல் பெண்மணி ஏற்படுத்திய டென்ஷனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், தாங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு டென்ஷன் ஏற்படுத்துகிறார்களே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஓ அந்த விஷயமா.. விரிவா சொல்றேன்… புதுச்சேரியின் பவர்புல் பெண்மணி நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். காக்கி உயரதிகாரிகளும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாட்டை மட்டுமே செய்து இருக்காங்க. அவரின் வருகை மதியம் 1.45 மணிக்கு தான் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாம். ஆனால் 1 மணி நேரம் முன்னதாகவே பவர்புல் பெண்மணி வந்துட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத காக்கிகள், பழைய ஏற்பாடுகளை அப்படியே கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாங்களாம். உடனடியாக, போக்குவரத்தை வேறு பக்கம் மாற்றி பவர்புல் பெண்மணி எளிதாக வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்தார்களாம். இதனால காக்கிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் அவஸ்தை பட்டாங்களாம். பவர்புல் பெண்மணி வந்த அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு என்பதால் பொதுவாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதாம். அதோடு இல்லாமல் திருமண   நிகழ்ச்சி முடிந்து, திருவனந்தபுரம் செல்வதாக தான் நிகழ்ச்சியாம். ஆனால் பவர்புல்பெண்மணி, கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டும் என கூறி விட்டாராம். இது பாதுகாப்பு பட்டியலில் இல்லையே என்று உயரதிகாரிகளுக்கு தகவல் சொன்னாங்களாம். அவங்க அடிக்கடி மாற்றிக் கொண்டு தான் இருப்பாங்க… அவங்க கேட்பதை செய்து கொடுங்க என்று சொன்னதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மாற்றிட்டாங்களாம். அது போதாதென்று, சுசீந்திரம் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம், அன்றைய தினம் இரவில் கன்னியாகுமரி கடலில் நடந்த சமுத்திர தீர்த்த ஆரத்தி விழாவில் பங்கேற்பு என பாதுகாப்பு பட்டியலில் இல்லாத இடங்களுக்கு சென்றாராம். இதனால டென்ஷன் ஆன காக்கிகள் பவர்புல் பெண்மணியின் இந்த பாதுகாப்பு குளறுபடி தங்களின் வேலைக்கு வேட்டு வைத்துவிடுமோ என்று பயந்தே போய்விட்டாங்களாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கீழ் உள்ளவர்களை பாதிக்காமல், புரோட்டோகாலை கடைபிடிக்க வேண்டும். பவர்புல் பெண்மணி எளிமையானவர். ஆனால் புரோட்டோகால் இல்லாத நிகழ்வில் பங்கேற்றால் எப்படி சமாளிப்பது என கேட்டுக் கொண்டே பெரும் பாடுபட்டு பாதுகாப்பு பணிகளை செய்தனர். திடீர், திடீரென   போக்குவரத்தை நிறுத்த, பொதுமக்களும் கொதித்தெழுந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்ய, கெஞ்சி கூத்தாடி நிலைமையை கூறி சமாளித்தனர்.பாதுகாப்பு லிஸ்டில் உள்ளவர்களின் இந்த செயலால் போலீஸ்காரர்கள் கிலியில் இருந்தாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ராமதாபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு விஷயத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் உள்ள தீவு நகரத்தில் ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டம்  நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்பணி குடிசை வாரியத்தினர் மேற்பார்வையில் நடக்க வேண்டும். ஆனாலும், கடந்த இலைக்கட்சி காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றிட நியமிக்கப்பட்ட, அக்கட்சியின் ஆதரவாளர்களே இப்போதும் ஏஜென்ட்களாக தொடர்கின்றனராம். உள்ளூர் அலுவலகத்தின் உரிய அலுவலர்களே மனுக்களை நேரடியாக பெற்று, முறையாக பரிசீலித்து பயனாளிகளை தேர்வு செய்தால் சரியாக இருக்கும். ஆனால் இலைக்கட்சி காலத்து ஏஜென்ட்களான, இத்துறைக்கே சம்பந்தமில்லாதவர்கள் இப்போதும் இத்திட்டத்திற்கென பயனாளிகளிடம் கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இலைக்கட்சி ஆதரவு ஏஜென்ட்கள் குறித்த பட்டியல் தயாரிப்பில் தென்மண்டல மாவட்ட அதிகாரிகள் வேகம் காட்டத் துவங்கி உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மதுரை ஆதினத்தில் அரசியல் புகுந்துவிட்டதா என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மதுரை ஆதீனத்துக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளன. மதுரை முக்கிய வீதிகளில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் மடத்திற்கு வருகிறது. மடத்தில், திருஞானசம்பந்தரின் தெய்வீகம், சமயம் சார்ந்த பணிகள் மட்டுமே நடைபெற்று வரும். அரசியல் சாயத்திற்கு இங்கு இடம்தராமல், மடத்தையும், சொத்தையும் பாதுகாத்து வந்தனர். இதில், முன்னாள் 292வது ஆதீனம், இந்து, முஸ்லீம், கிறிஸ்து என சாதி மதம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகி, அனைத்துத்தரப்பு மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். மடத்தில் உள்ள நகைகள், வைரங்கள், சொத்துக்களை கைப்பற்ற நித்யானந்தா, இந்துமத கட்சிகள் உள்ளிட்ட பலர் முயன்றும் அது நிறைவேறவில்லை. அவர்களை மடத்தின் வாசலில் மிதிக்கக்கூட அனுமதிக்கவில்லை. இந்த மடத்தின் சொத்துக்களை அபகரிக்க எவ்வளவோ பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி, போராட்டம் நடத்தியும் தோல்வியில் முடிந்தன. தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. 293வது மதுரை ஆதீனம், பதவி ஏற்றபோது, மடத்தில் தெய்வீகப்பணி மட்டுமே நடக்கும் என்றும், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றார். ஆனால், தற்போது அவரின் நிலை மாறிவிட்டது. ஏற்கனவே மடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி வந்தவர்களை எல்லாம் வெளியேற்றி விட்டாராம். எந்த மதக்கட்சியை முன்னாள் ஆதீனம் உள்ளே விட மறுத்தாரோ, அதே கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை மடத்தில் உள்ளே அனுமதித்துள்ளாரா என்று ஆதீனத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் வேதனைப்பட்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.         …

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா