பாதுகாப்பு ஏற்பாடுகளை தர்மபுரி எம்பி ஆ.மணி ஆய்வு

பென்னாகரம், ஜூலை 29: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்மபுரி எம்பி ஆ.மணி, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கர்நாடக, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.60 லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், காவிரி ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் ஒகேனக்கல் சுற்றுப்புற கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை தர்மபுரி எம்பி ஆ.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்தும், கரையோர மக்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் மீனவர் அணி மிதுன் காளியப்பன் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி