பாதிக்கப்பட்ட பகுதி வீடுகள்தோறும் உணவு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 2,859 பேரை போலீசார் மீட்டனர்: சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றம்

சென்னை: சென்னையில் கன மழையால் குடியிருப்புகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மீட்பு பணிக்காக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 13 காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 4 நாட்களாக இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈட்டு, வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு தற்காலிக  முகாம்களில் தங்க வைத்துள்ளனர். சென்னை மாநகர வடக்கு மண்டலத்தில் ஏழுகிணறு மாநகராட்சி சமுதாய நலக்கூடம், வண்ணாரப் பேட்டையில் கெனால் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம், எம்எம்.காலனி பகுதியில் எவர்வின் தனியார் பள்ளி வளாகம், மாநகர கிழக்கு மண்டலத்தில் வேப்பேரியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, மேற்கு மண்டலத்தில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம், கன்னிகாபுரம் தாஸ் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தெற்கு மாநகர காவல் மண்டலத்தில் சைதாப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி, செம்மஞ்சேரி பகுதியல் உள்ள பஞ்சாயத்து யூனியன் துவக்க பள்ளி, சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி உட்பட மாநகர காவல் எல்லையில் 64 தற்காலிக முகாம்களில்  1,104 ஆண்கள், 1,198 பெண்கள், 557 குழந்தைகள் என 2,859 பேரை போலீசார் பத்திரமாக மீட்டு தங்க வைத்துள்ளனர். மேலும், சின்ன மாத்தூர் லிங்க் ரோடு பகுதியில் தவித்த 20 பேரை போலீசார் படகுகள் மூலம் மீட்டனர். பெரவள்ளூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு போலீசார் படகுகள் மூலம் உணவு, குடிநீர் கேன்களை விநியோகம் செய்தனர். இதுதவிர மாம்பலம் காவலர் குடியிருப்பு, கோடம்பாக்கம் டெய்லர்ஸ் சாலை முதல் தெரு, விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா தெரு, தேனாம்பேட்டை டிடிகே சாலை, லயோலா கல்லூரியில் சுற்றுச்சுவரை உடைத்து விழுந்த மரம், சூளைமேடு காமராஜர் நகர் 4வது தெருவில் வீட்டின் மீது விழுந்த மரம், ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிசாலையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் விழுந்த மரம், கவர்னர் மாளிகை அருகே சாலையில் விழுந்த மரம் என 30க்கும் மேற்பட்ட மரங்களை போலீசார் அகற்றினர். நீலாங்கரை அறிஞர் அண்ணா நகரில் வெள்ள நீரால் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த, பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை மற்றும் தாயை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார். இதேபோல், சென்னை முழுவதும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.* 84 செல்லப்பிராணிகள் மீட்புசென்னையில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்களை மீட்க தீயணைப்பு துறை மூலம் 1300 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 4 நாட்களாக சென்னை முழுவதும் 400 பேரை மீட்டுள்ளனர். இதேபோல், வீடுகள் மற்றும் வெள்ள நீரால் அடித்து வரப்பட்ட நாய்கள், வாத்து, மாடுகள், பூனைகள் என 84 செல்ல பிராணிகளை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். இதுதவிர சென்னை முழுவதும் 156 இடங்களில் தேங்கிய வெள்ள நீரையும் ராட்சத இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.* குழந்தை பிறந்த நாளுக்கு கேக் வெட்டிய போலீசார்பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதித்தவர்கள் மீட்கப்பட்டு பெருங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். துரைப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அங்கு பார்வையிட்டபோது, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மோனிகா என்கிற குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து, துரைப்பாக்கம் எஸ்ஐ ஜெய்கணேஷ், தலைமை காவலர்கள் நவரத்தினம், பாரதி காவலர் சூரியசந்திரன் ஆகியோர் குழந்தைக்கு புத்தாடை, சாக்லேட் வாங்கி கொடுத்து, கேக் வெட்டி கொண்டாடினர். தகவலறிந்த கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் வந்து, குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பரிசு வழங்கினார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை