பாகூர் அருகே 4 பேர் கும்பல் வாலிபரை வெட்டி கொன்றது ஏன்? விசாரணையில் பகீர் தகவல்

பாகூர், பிப். 21: புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவானந்தம்(27). கிருமாம்பாக்கத்தில் உள்ள கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடன் பணிபுரியும் பிரகாசுடன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அருந்ததி நகர் பம்ப் ஹவுஸ் அருகே சென்றபோது 4 பேர் கும்பல் சிவானந்தனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானது. தகவலின்பேரில் சீனியர் எஸ்பி சுவாதிசிங், எஸ்பி பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையிலான போலீசார் சிவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோத தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை தனிப்படை தீவிரமாக தேடிய நிலையில், ரெட்டிச்சாவடி அடுத்த மதலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகி என்ற மகேந்திரன் (23), அவனது கூட்டாளிகள் ஆகாஷ் (22), ரஞ்சித் (22), கார்த்திக் (22) ஆகிய 4 பேரும் கடலூர் புதுநகர் போலீசில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து முக்கிய குற்றவாளியான மகி என்ற மகேந்திரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மகி அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மகியின் பாட்டி வீடு ஈச்சங்காடு பகுதியில் சிவானந்தம் வீட்டிற்கு அருகில் இருந்து வருகிறது. சிறுவயதில் இருந்து அடிக்கடி பாட்டி வீட்டுக்கு மகி சென்று வருவது வழக்கம். மேலும் மகியும் அவரது கூட்டாளிகளான ரஞ்சித், கார்த்தி, ஆகாஷ் ஆகியோரும் சென்று வந்துள்ளனர்.கடந்த செப்டம்பர் மாதம் ஈச்சங்காட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி வீதியுலாவில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது மகியை பார்த்து ஏன்? எங்க ஊருக்கு வந்தாய் என்று கேட்டு சிவானந்தம் அடித்து விரட்டியுள்ளார். மேலும் வம்பாபேட் பகுதி வரை விரட்டிச் சென்று தாக்கியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் பார்த்ததால் மகிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் அவமானமாக இருந்துள்ளது.

ஆனால் இதுசம்பந்தமாக அவர்கள் போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.தகவலறிந்த மதலப்பட்டு ஊர் இளைஞர்கள், மகியையும், கூட்டாளிகளையும் அலட்சியமாக பேசி கேலி செய்து வந்துள்ளனர். இதனால் சிவானந்தத்தை கொலை செய்துவிட வேண்டுமென்று தொடர்ந்து திட்டமிட்டுள்ளனர். அதன்படி சமீபத்தில் சபரிமலைக்கு சென்று வரும் வழியில் குற்றாலத்தில் 4 கத்திகளை வாங்கி மறைத்து வைத்துள்ளனர்.சம்பவத்தன்று பிற்பகல் ஈச்சங்காடு பகுதியில் உள்ள சோப்பு கம்பெனி அருகில் மகி உள்ளிட்ட 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சிவானந்தம் வீட்டிற்கு வந்ததை பார்த்ததும் அவரை பின்தொடர்ந்தனர். அவர் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற அவர்கள் 3 மோட்டார் சைக்கிளில் வந்து, முதலில் 2 பேர் கிருமாம்பாக்கம் வாட்டர் டேங்க் அருகிலுள்ள அருந்ததி நகர் பகுதியில் வழி மறித்தனர்.பின்னர் கையால் தாக்கியதில் வலிதாங்க முடியாமல் ஓடி முட்புதரில் சிக்கினார்.

அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்துவந்த 4 பேரும் சரமாரியாக சிவானந்தத்தை வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமானது தெரியவந்ததும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகு கொலை சம்பவத்தை அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் கொலையாளிகள் பற்றி தகவல் கிடைக்கவே அவர்களை கைது செய்துவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனிடையே சம்பவம் நடந்தபோது சிவானந்தத்துடன் பிரகாஷ் என்பவர் வந்ததாகவும், அவரை மிரட்டிய கும்பல், செல்போனை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையுண்ட சிவானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று ஈச்சங்காடு பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

Related posts

பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு கல்லூரி மாணவர்களுக்கு ஹாக்கி, கபடி போட்டிகள்

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.5000 வழங்க கேட்டு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்