பஸ் நிலையம், ஸ்டேஷனரி கடைகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

தர்மபுரி, ஜூன் 12: கோடை விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று (12ம் தேதி) திறக்கப்படுவதால், தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதே போல் ஸ்டேஷனரி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் இருந்தது.தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்தறை அறிவித்தது. கோடை வெயில் சுட்டெரித்த காரணத்தால், பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. இதையடுத்து, இன்று (12ம் தேதி) தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 14ம் தேதி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விடுமுறைக்காக சென்றவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல், ஊர் திரும்ப தொடங்கினர்.

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில், மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா தலங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்த மாணவ, மாணவிகள், தங்களது பெற்றோருடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக, பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், பென்னாகரம், அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அரசு அறிவிப்பின்படி, பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தலைமை ஆசிரியர்கள் செய்து உள்ளனர். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு தேவையான நோட்டு வாங்குவதற்கும், பேனா, பென்சில், ரப்பர், காலணிகள், ஸ்கூல் பேக், வாட்டார் பாட்டில், டிபன் பாக்ஸ் வாங்குவதற்காக, பெற்றோர்கள் அழைத்து வந்தனர். இதனால் தர்மபுரி, அரூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் ஆகிய நகர பகுதிகளில் உள்ள ஸ்டேஷனரி கடைகளில், வியாபாரம் களை கட்டியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா பகுதிகளில், 1575 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், தர்மபுரி, அரூர் தொடக்க கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 1165 உள்ளன. தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 647 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 518 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து, இன்று 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கும், நாளை மறுநாள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் அன்று 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மேலும் சீருடைகள் வழங்கும் பணியும், மாணவர்கள் சேர்க்கையும் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைகால் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை