பஸ்சில் பெண்ணிடம் 9 சவரன் நகை திருட்டு ஆரணியில் மர்ம ஆசாமிகள் கைவரிசை திருமணத்திற்கு சென்று திரும்பிய போது

ஆரணி, ஜன.23: ஆரணியில் திருமணத்திற்கு சென்று திரும்பிய பெண்ணிடம் பஸ்சில் 9 சவரன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசகுமார்(58). இவரது மனைவி ஜெயந்தி(51), இவரது, அக்கா சுமதி, தம்பி பாலாஜி ஆகிய 4பேரும், கடந்த 20ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருந்தனர். மேலும், திருமண நிகழ்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் ஜெயந்தி அவரது குடும்பத்தினர் மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ஆரணி டவுன் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, ஜெயந்தியின் அக்கா சுமதியை வேலூரில் உள்ள அவரது வீட்டிற்கு பஸ்சில் அனுப்பிவிட்டு, ஜெயந்தி உட்பட 3 பேரும் காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக ஜெயந்தி திருமணம் முடிந்ததும் தான் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் நகைகளை, ஒரு வேட்டி துணியில் சுற்றி பையில் வைத்திருந்தார். அப்போது பஸ்சில் அந்த பையை திறந்து பார்த்தபோது நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, ஜெயந்தி கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தி அவரது கணவருடன் பஸ் முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை. மேலும், நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ஜெயந்தி ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில்,போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமணம் மண்டபம், பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், ஜெயந்தியின் தம்பி பாலாஜியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை