பவானி சாகரில் மீனவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

சத்தியமங்கலம், ஜூலை 8: பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று பவானிசாகரில் மீனவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பவானிசாகர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அந்தோணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

தமிழ்நாட்டில் உள்நாட்டு நீர் நிலைகளில் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவர்கள் பங்குதாரர்களாக உள்ள பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் மண்டல மீனவரணி பொதுச் செயலாளர் சேகர், துணைச் செயலாளர் பழனிச்சாமி, சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர் பொங்கியண்ணன், விவசாய அணி தலைவர் சுப்பிரமணி, பவானிசாகர் மற்றும் சிறுமுகை பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்