பவானிசாகர் அணை நீர்மட்டம் 83 அடியாக உயர்வு

சத்தியமங்கலம்,ஜூலை28: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5827 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 82.78 அடியாகவும், நீர் இருப்பு 17.2 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக கடந்த 6 நாட்களில் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி