பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்துக்கு கூடுதல் நீர் திறப்பு

ஈரோடு, ஏப். 30: பவானி சாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பது நீலகிரி மலைப் பகுதி ஆகும். கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்துக்காக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.15 அடியாக இருந்ததது. அணைக்கு வினாடிக்கு 1,039 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்துக்காக 800 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 150 கன அடியும் என அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 3,850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில், நேற்று முன் தினம் வரை தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்காக 700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் மேலும் 100 கன அடி தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல 41.75 அடி உயரம் கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 37.56 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.54 அடியாகவும், 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.51 அடியாகவும் உள்ளது. நேற்றைய காலை 8 மணி வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லை.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை