பழையாறு துறைமுகத்தில் மீன்கள் அதிகம் கிடைத்தும் விலை வீழ்ச்சி

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் சற்று அதிகமாக கிடைத்தும் விலை வீழ்ச்சியில் இருந்து வருவதால் மீனவர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் துறைமுக வளாகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாகவும், இயற்கை துறைமுகமாகவும் இத் துறைமுகம் விளங்கி வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று முன் தினம் அதிகாலை முதல் பழையாறு துறைமுகத்தின் மூலம் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க துவங்கியுள்ளனர். 60 நாட்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற மீனவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிக மீன்களை பிடிக்கலாம் என்று நினைத்து, விரும்பியது போல மீன்களைப் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து மீனவர்கள் கூறுகையில், சென்ற வருடத்தை விட இந்த வருடம் மீன்பிடி தடை காலத்துக்குப் பிறகு மீன்கள் சற்று அதிகமாக கிடைத்து வருகின்றது. ஆனால் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் விற்பனையாகவில்லை. வெளியூர்களிலிருந்து வந்துள்ள பெரும் வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் மிகக் குறைந்த அளவுக்கே மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் மீன்கள் அதிகம் கிடைத்த நிலையில், விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் வருத்தம் அடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை