அவிநாசி, ஏப்.10: அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் வீதியில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பொது நூலகக் கட்டிடத்தை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி பேரூராட்சி 9வது வார்டு பாரதிதாசன் வீதியில் 30 ஆண்டுகளுக்கு முன் அவிநாசி முன்னாள் ஆசிரியர்களால் தானமாக வழங்கப்பட்ட இடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த நூலகத்தில் நாள்தோறும் ஏராளமான வாசகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வந்து பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இக்கட்டிடம் தற்போது மேற்கூரை உள்ளிட்டவை மிகவும் பழுதடைந்து, வாசகர்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஆகவே, இதனை பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மாவட்ட நிர்வாகம், நூலக ஆணைக்குழு உள்ளிட்டோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளனர்.


