பழநி பங்குனி உத்திர திருவிழா பைக் ரோந்து பணியில் மகளிர் போலீசார்

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் பைக் ரோந்து பணியில் மகளிர் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழநி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், வெள்ளிதேரோட்டம் இன்றும், தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக பழநி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழநி நகர் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதயாத்திரை வழித்தடங்களில் ரோந்து செல்வதற்கு 4 சக்கர வாகனங்கள் இடைஞ்சலாக இருக்குமென்பதால் தற்போது பைக் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மகளிர் போலீசாரும் தற்போது பைக் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக 15 தோழி பைக்குகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தன.     நேற்று தோழி பைக் ரோந்து பணியை திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் டிஎஸ்பி சத்யராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவரென தெரிவித்துள்ளனர். தவிர கிரிவீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி, சுற்றுலா பஸ் நிலையங்கள், இடும்பன் குளம், சண்முகநதி பகுதி, பைபாஸ் சாலை, வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் மலைக்கோயில்களில் இப்போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.     பக்தர்கள் கூட்டம் ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், கூட்ட நெரிசல் ஏற்படாமல் சீராக செல்லும் வகையில் வழிநடத்தி செல்ல போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தவிர, பக்தர்கள் போர்வையில் சுற்றித்திரியும் குற்றவாளிகளை அடையாள காணும் வகையில் மப்டி போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமிரா, கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை