பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.81 கோடியில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ரூ.23.81 கோடியில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் முதன்மை கோயில்களில் ஒன்றான மற்றும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஆண்டுக்கு 1.50 கோடி பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதியை முழுமையாக பூர்த்தி செய்யும் பொருட்டு ரூ.23 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக  திறந்து வைத்தார். பழநி, பாலசமுத்திரம் கிராமம் அருகில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்டி அதிலிருந்து மலைக்கோயில், தங்கும் விடுதிகள் மற்றும் சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றுக்கு 2.31 எம்எல்டி தண்ணீர் வழங்கும் வகையில் ரூ.22 கோடியே 72 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் முடிக்கப்பட்டது. மலைக்கோயிலில் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மணி ஓசை எழுப்பும் வகையில் புதிதாக நாதமணி மண்டபம் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்முழுவதும் அன்னதான திட்டத்தின்கீழ் நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் உணவருந்தி வருகிறார்கள். இந்த அன்னதான திட்டத்தில் உணவருந்த வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.58 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 108 இருக்கைகளுடன் கூடிய புதிய அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன் மற்றும்  காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் சக்கரபாணி, எம்பி வேலுச்சாமி, எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், கலெக்டர் விசாகன் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி