பழநி கோயில் ரோப்காரில் பயணிக்க ரூ.50 கட்டணம் வசூல்-முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

பழநி : பழநி கோயில் ரோப்காரில் பயணிக்க சிறப்பு கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பழநி வரும் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்பட்டு வருகிறது.இதில் வின்ச்சில் பயணிக்க சாதாரண கட்டணமாக 10 ரூபாயும், சிறப்பு வழி கட்டணமாக மலைக்கு செல்வதற்கு 25 ரூபாய்  வசூலிக்கப்படுகிறது. இதுபோல் ரோப்காரில் பயணிக்க சாதாரண கட்டணமாக 15 ரூபாயும், சிறப்பு வழி கட்டணமாக 50ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.அப்போது ரோப்கார் கட்டணமாக 50ரூபாய்  வசூலிக்கப்பட்டது. 15ரூபாய்  கட்டணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது பழநி கோயிலில் பக்தர்கள் வருகை இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பழநி கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது வரை ரோப்காரில் பயணிக்க  15ரூபாய்க்கான டிக்கெட் வழங்கப்படுவதில்லை. 50 ரூபாய் டிக்கெட் வாங்கினால் மட்டுமே ரோப்காரில் பயணிக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. பழநி கோயிலுக்கு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகளவு வருகின்றனர்.இதில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ரோப்காரில் மலைக்கோயில் சென்றுவர 400 ரூபாய் செலவாகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, பழநி கோயில் நிர்வாகத்தினர் ரோப்காரில் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை நிர்வாகி செந்தில்ஜி கூறியதாவது: தமிழக கோயில்களில் பழநியில் மட்டுமே ரோப்கார் செயல்பட்டு வருகிறது. சாமானியர்கள் பயணிக்கும் வகையிலான ரோப்காரில் சாதாரண கட்டணத்தை நிறுத்துவிட்டு, சிறப்பு கட்டணத்தை மட்டுமே வசூலிப்பது அவர்களை வஞ்சிப்பதற்கு சமமாகும். பழநி கோயிலுக்கு பல்வேறு இனங்களில் இருந்து கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பர்சை பதம் பார்க்கும் வகையில் ரோப்கார் மற்றும் வின்ச் கட்டணத்தை குறைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்