பழநி கோயில் திருப்பணிக்கு ஆன்லைனில் நன்கொடை செலுத்தும் வசதி: பக்தர்கள் கோரிக்கை

பழநி: பழநி கோயில் திருப்பணிக்கு ஆன்லைனில் நன்கொடை செலுத்தும் வசதியை ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி 2018ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், நடத்தப்பட வில்லை. இதனால் பழநி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது கோபுரங்கள் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேக திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்க விருப்பப்படுவது வழக்கம். கோயில் நிர்வாகம் சார்பில் நன்கொடை பெறப்பட்டு பணிகள் நடைபெறும். ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகுஜி கூறுகையில், ‘தமிழகத்தின் முக்கிய கோயிலாக இருப்பதால் பலரும் கும்பாபிஷேக பணிக்கான நன்கொடைகள் வழங்க ஆவலாக உள்ளனர். குளறுபடிகள் மற்றும் மோசடிகளை தவிர்க்க பிரத்யேக வங்கி கணக்கு கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்த வேண்டும். மேலும் கோயில் இணையதளத்திலும் ஆன்லைன் மூலம் கும்பாபிஷேக பணிக்கான நன்கொடை வழங்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். நன்கொடை வழங்குபவர்களுக்கு ஆன்லைனிலேயே அதற்கான அத்தாட்சி ரசீது கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்….

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்