பழநி கோயிலில்ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்பணி புறக்கணிப்பு போராட்டம்

பழநி, ஏப். 12: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பழநி மலை க்கோயில், அடிவாரம், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில் மற்றும் திருக்கோயில் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.6 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் பணி, வருங்கால வைப்பு நிதி பிடித்தம் போன்றவை போக ரூபாய் ரூ.2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை சம்பளம் தரப்படுவதாக தெரிகிறது. இவர்கள் தங்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சம்பள பட்டுவாடாவை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தொகைகளை உடனடியாக வழங்க வேண்டுமென தனியார் ஒப்பந்த நிறுவனத்தை பலமுறை வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், இதுவரை உரிய பலன் இல்லை. இதன் காரணமாக நேற்று காலை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து தண்டபாணி நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வரும் மே மாதம் முதல் ஊதியத்தை உயர்த்தி தருவதாக அதிகாரிகள் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?