பழநியில் 1500 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை: நகராட்சி நடவடிக்கை

 

பழநி, ஜன. 8: பழநியில் 1500 தெருநாய்களுக்கு நகராட்சி சார்பில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தெருநாய்கள் அதிகளவு உலவுகின்றன. கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்து வந்தன. நடக்க முடியாத மூதாட்டிகளும் நாய்க்கடிக்கு அதிகளவு ஆளாகினர்.

எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதன் காரணமாக நகராட்சி சார்பில் தெருநாய்களை பிடித்து இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மற்றும் ராபீஸ் நோய் தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையர் பாலமுருகன் தலைமை வகித்தார். நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.மனோஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அறுவை சிகிச்சை பணிகளை கண்காணித்தனர். பிராணிகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட என்ஜிஓ அமைப்பின் மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முதற்கட்டமாக நேற்று ராணடே காம்பவுண்டு, அப்பர் தெரு, மில் ரோடு, கவுண்டன்குளம், இந்திரா நகர், தேவாங்கர் தெரு மற்றும் சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, குணமாகும் வரை பராமரிக்கப்படும். பின், வேறு இடங்களில் கொண்டு சென்று விடப்படுமென நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பழநி நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுற்றித்திரியும் சுமார் 1500 தெரு நாய்கள் பிடிக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை