பழக்கத்தை விடமுடியாது எனக்கூறி அடம் விமானத்தில் புகைப்பிடித்த ராமநாதபுரம் பயணி கைது

சென்னை, ஜூன் 11: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்திற்குள் புகைப்பிடித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 174 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, பயணிகளிடம் சீட் பெல்ட் அணியும்படி கூறப்பட்டது. அதன்பின்பு பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்று விமான பணிப்பெண்கள் சரி பார்த்தபோது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி, தனது இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்துக் கொண்டு இருந்தார்.

இதை பார்த்ததும் விமான பணிப்பெண்கள், விமானத்திற்குள் புகை பிடிக்க அனுமதி கிடையாது. எனவே சிகரெட்டை அணையுங்கள் என்று கூறினர். மேலும், அவர் பாதுகாப்பு சோதனையை மீறி எப்படி விமானத்திற்குள் சிகரெட் எடுத்து வந்தார் என்று விசாரிக்க தொடங்கினர். ஆனால் அந்த பயணி, என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்று கூறி, தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். சக பயணிகள் அவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. இதனையடுத்து விமான பணிப்பெண்கள், விமான தலைமை விமானியிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, புகைபிடித்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அவரது உடமைகளும் கீழே இறக்கப்பட்டன. அவரது மலேசிய பயணமும் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின்பு அந்த விமானம் 173 பயணிகளுடன், சுமார் ஒரு மணி நேர தாமதமாக இரவு 11.07 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே விமானத்திலிருந்து ஆப் லோடு செய்யப்பட்ட ஆறுமுகத்தை, இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஆறுமுகம் வேலைக்காக மலேசியா சென்றது தெரிய வந்தது. பின்னர் ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது பாதுகாக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி புகை பிடித்தது, விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்