பள்ளிபாளையம் அருகே நவீன முறையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகன் கைது

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே நவீன முறையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக கிராம விவசாயிகள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக, வீட்டிலேயே சாராயம் காய்ச்சி வருவதாக எஸ்பி சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் எஸ்ஐக்கள் பிரபு, கௌதம், வெற்றிவேல், ஏட்டு ராம்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது,  பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை ரங்கனூர் சுக்கராயன்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பண்ணன்(50), அவரது மருமகன் மணிகண்டன்(28) ஆகிய இருவரும் சேர்ந்து சாராயம் காய்ச்சி வருவது தெரிய வந்தது. உடனே, சம்பவ இடம் விரைந்தனர். அங்கு கருப்பண்ணன் வீட்டில் நவீன முறையில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக சாராயம் காய்ச்சுவதற்காக பாரம்பரிய முறைப்படி மண்பானைகள் மற்றும் விறகு அடுப்பினை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், துரித கதியில் சாராயம் காய்ச்சி வடிக்கும் வகையில், விறகு அடுப்பிற்கு பதிலாக எரிபொருளாக சமையல் காஸ் மற்றும் மண்பானைகளுக்கு பதிலாக டிரம்களில் ஊறலை ஊற்றி காய்ச்சி சாராயம் வடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சாராயம் மற்றும் 100 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். …

Related posts

ஈரோடு அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல்!!

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 8 நாட்களே ஆன சிசு கொலை: 2 பேர் கைது

சொத்தை எழுதி தர மறுத்ததால் ஆத்திரம் விஏஓ ஆபீசில் தந்தை, தங்கை சரமாரி வெட்டிக் கொலை: விவசாயி கைது