பள்ளிக்கு செல்லும்போது ஆபத்தான பயணம்; விதிமீறி பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அபாயம்

வேலூர்: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல், பள்ளிக்கு செல்லும்போது, பைக்குகளில் மின்னல் வேகத்தில் சாகச பயணம் மேற்கொள்வது தொடர்கிறது. இது சாலை விதிகளை கடைபிடித்து செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களே வாகனம் ஓட்ட தகுதியுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை வீட்டில் உள்ளவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களில் பறப்பது அதிகரித்துள்ளது. இதுபோன்று சிறுவர்கள் பைக்கில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக்கொண்டு போக்குவரத்து நிறைந்த சாலைகளில் கூட மின்னல் வேகத்தில் சாகச பயணம் செய்வது பார்ப்பவர்களை பதற வைக்கிறது. இவர்கள் எதிரே வரும் வாகனத்தை பொருட்படுத்துவதில்லை.  எந்த இடத்திலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதும் இல்லை. இதுபோன்ற சிறுவர்களால் சாலையில் விதிமுறைகளை கடைப்பிடித்து குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும்  55 ஆயிரத்து 713 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 14 ஆயிரத்து 912 பேர் இறந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் இறந்துள்ளனர். லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேரும், கார்கள், டாக்சி விபத்துகளால் 2,467 பேரும், வேன் மற்றம் சிறிய வகை சரக்கு வாகனங்களால் 1,140 பேரும் இறந்துள்ளனர். அதுபோல், தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 4,129 பேரும், மாநில நெடுஞ்சாலை விபத்துகளில் 4,929 பேரும் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டம் கூறுகிறது. இந்த வயதுக்கு மேல் வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு வாகனம் ஓட்டும்போது சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணம் மனதில் இருக்கும். 18 வயதுக்கு கீழ் உள்ள  சிறுவர்கள் வாகனம்  ஓட்டும்போது, அவர்களின் கவனம் முழுவதும் வேகத்தில் தான் உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்களை பற்றி இவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. ஒவ்வொரு வீடுகளிலும்  குறைந்தபட்சம் 2 பைக்குகள் உள்ளது.  இதில் பெற்றோர் பெருமைக்காக சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்கின்றனர். சிறுவர்கள் பெற்றோர் பார்வையில் பைக்கை குறிப்பிட்ட வேகத்தில் ஓட்டுவது போல் காட்டுகின்றனர். ஆனால் சாலைக்கு வந்த பிறகு, அவர்களின் வேகம் மாறிவிடுகிறது. சாலையில் மின்னல் வேகத்தில் பறக்கின்றனர். பைக்கில் சாகச பயணம் செய்யும் இதுபோன்ற சிறுவர்களை போக்குவரத்து போலீசாரும் பிடிப்பதில்லை. லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டும் சிறுவர்களை பிடித்து, அவர்களின் பெற்றோரை வரவழைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அபராதம்  விதிக்க வேண்டும். அப்போது தான் சிறுவர்கள் பைக் ஓட்டுவது குறையும்.  இல்லை என்றால் சாலையில் இவர்களின் சாகச பயணம் அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்