பள்ளிகொண்டா அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பலி

பள்ளிகொண்டா, ஜூன் 23: பள்ளிகொண்டா அருகே விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு புகுந்து கடித்து குதறியதில் 8 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வசந்த நடை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. கிருஷ்ணமூர்த்தி தனக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை பராமரித்து கொண்டே விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு விவசாய பணிகளை கவனித்து கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார்.

வீட்டில் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு மாலை 4 மணியளவில் மீண்டும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, 8 ஆடுகள் மர்மமான முறையில் கடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அணைக்கட்டு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் கடித்து குதறி இறந்த ஆடுகளை பரிசோதித்ததில் ஆடுகளை வெறிநாய் கடித்து குதறி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விவசாயி செய்வதறியாமல் கண்ணீர் மல்க விவசாய நிலத்திலேயே ஆடுகளை புதைத்தார். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதேபோல் மர்ம விலங்கு கடித்து 3 மாடுகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடைகளை வளர்ப்போர் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு