பல கோடி ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக அன்புசெழியனுக்குச் சொந்தமான இடங்களில் 3வது நாளாக சோதனை: ஆவணங்களை மதிப்பீடு செய்து வரும் ஐடி அதிகாரிகள்

சென்னை: பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. இதில் சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்க பணத்தை தற்போது மதிப்பீடு செய்யும் பணியில்  அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சினிமா துறையில் பைனான்சியராகவும், சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் அன்புசெழியன் மற்றும் அவரது நண்பர்களான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு, ஞானவேல் ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசன் ஆகியோர் ஒன்றிய அரசுக்கு முறையாக கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் அவரது நண்பர்களான சினிமா தயாரிப்பாளர்கள் 5 பேருக்கு சொந்தமான சென்னை, மதுரை, வேலூர் என தமிழகம் முழுவதும் 40 இடங்களுக்கு மேலாக கடந்த 2ம் தேதி காலை முதல் 3வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை தி.நகர் ராகவையா சாலையில் வீடு, அதே சாலையில் அமைந்துள்ள கோபுரம் பிலிம்ஸ் நிறுவன அலுவலகம், மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புசெழியன் பங்களா வீடு, தெற்கு மாசி வீதியில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகம், செல்லூரில் உள்ள அவரது கோபுரம் பிலிம்ஸ் நிறுவன அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பினாமி பெயரில் உள்ள ஆவணங்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்து டெல்லியில் இருந்து வந்த 3 சிறப்பு அதிகாரிகள் முன்னிலையில் மதிப்பீடும் பணி நடந்து வருகிறது. அதேபோல், சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு சொந்தமான தி.நகர் தணிகாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் சினிமா தயாரிப்பு நிறுவனம், மற்றும் ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ தயாரிப்பு நிறுவனம், திரைப்படம் எடுத்த சத்ய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளரும் தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன், வேலூரை சேர்ந்த வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், எஸ்.பிலிம்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் 3வது நாளாக சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கடந்த 2020ம் ஆண்டு சிக்கியதை விடு கூடதலாக அதிகளவில் ரொக்க, பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் பணம் சிக்கி உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. எனவே இந்த சோதனை முடிவில் தான் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு அன்புசெழியன் உட்பட 6 பேர் வரிஏய்ப்பு செய்துள்ளனர் என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி