பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த ₹2 கோடி போதைப்பொருள் அழிப்பு: கமிஷனர் சங்கர் ஜிவால் ஆய்வு

செங்கல்பட்டு, ஜூன் 27: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ₹2 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹெராயின் உள்பட போதைபொருட்கள் நீதிமன்ற ஆணைப்படி, செங்கல்பட்டு அருகே நேற்று தனியார் தொழிற்சாலையின் பர்னர் இயந்திரத்தில் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது. இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போலீசாரால், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ₹2 கோடி மதிப்பிலான 1.215 கிலோ கஞ்சா, மெத்தபெட்டமைன், ஹெராயின் உள்பட பல்வேறு போதை பொருட்களை, நீதிமன்ற ஆணைப்படி, தீயிட்டு எரித்து அழிக்கும் நிகழ்ச்சி, செங்கல்பட்டு அருகே தென்மேல்
பாக்கத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் நேற்று காலை நடைபெற்றது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில், தனியார் தொழிற்சாலையில் உள்ள ராட்சத பர்னர் கருவி மூலம் அனைத்து போதைபொருட்களும் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன. பின்னர், நிருபர்களிடம் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், ‘‘பல்வேறு வழக்குகளில் கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொகைன், மெத்தம்பெட்டமைன் உள்பட பல்வேறு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை மிகவும் ஆபத்தானவை. அவற்றை வைப்பதற்கான இடவசதி கருதியும், சட்டத்தின்கீழ் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை உரிய முறைப்படி அழிக்க, சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யாபாரதி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலநாகஜோதி, தடய அறிவியல் துறை துணை இயக்குநர் விசாலாட்சி ஆகியோரை கொண்ட குழு இயங்கி வருகிறது.

அதன்படி தற்போது ₹2 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். இதற்குமுன், கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் முதன் முறையாக காவல் துறை சார்பில், 1.075 கிலோ எடை போதைப்பொருள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, அக்டோபர் 8ம் தேதி 2வது முறையாக 845 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யாபாரதி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலநாகஜோதி, தடய அறிவியல் துறை துணை இயக்குநர் விசாலாட்சி உள்பட பல்வேறு காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை