பல்லாவரத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூல்: அனைவருக்கும் கல்வி கொள்கைக்கு எதிரானது என கண்டனம்

பல்லாவரம், ஜூன் 7: பல்லாவரத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுதொடர்பான சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பரங்கிமலை – பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் கீழ், பரங்கிமலையில் காமராஜர் கன்டோன்மென்ட் ஆரம்பப்பள்ளி, காந்தி கன்டோன்மென்ட் மான்டசரி பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர் கன்டோன்மென்ட் உயர்நிலைப்பள்ளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி ஆகிய 4 பள்ளிகள் மற்றும் பல்லாவரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கன்டோன்மென்ட் ஆரம்பப்பள்ளி, டாக்டர். அம்பேத்கார் கன்டோன்மென்ட் மான்டசரி பள்ளி, அறிஞர் அண்ணா கன்டோன்மென்ட் உயர்நிலைப்பள்ளி என்னும் 3 பள்ளிகள் என மொத்தம் 7 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிகள் அனைத்திலும் பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 2024-25ம் கல்வியாண்டில் இருந்து பரங்கிமலை மற்றும் பல்லாவரத்தில் செயல்படுகின்ற 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தமிழ் வழிக்கல்வி மற்றும் மாண்டிசோரி ஆங்கில மழலையர் ஆரம்பக்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடம் இருந்து ₹600 கல்வி மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பள்ளிகளில் பயிலும் இரு பாலின மாணவர்களுக்கு இதுநாள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த பாட நூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள், பைகள், காலணிகள் ஆகியவற்றிற்கும் அதற்குரிய விலையை வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் இந்த செயலானது பகுதிவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கன்டோன்மென்ட் போர்டு முன்னாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான பூபாலன் கூறுகையில், ‘‘கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகம் கடந்த ஆண்டே கட்டணம் செலுத்த வேண்டுமென பெற்றோர்களை நிர்பந்தித்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த, ஆண்டும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டுமென கன்டோன்மென்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

கன்டோன்மென்ட் மற்றும் சுற்று பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில கல்வி அறிவு பெற வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் இலவசமாக பள்ளி தொடங்கப்பட்டது. மேலும், இந்திய அரசமைப்பு சட்டம் ‘21ஏ’-ல் வழங்கப்பட்டுள்ள 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வியளிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமைக்கும், பிரிவு ‘62’ கன்டோன்மென்ட் சட்டம் 2006ல் குறிப்பிட்டுள்ள கன்டோன்மென்ட் நிர்வாகத்தின் கட்டமைப்புக்கும் இது எதிரான செயலாகும்.

அனைவருக்கும் கல்வி எனும் அரசின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையும் ஆகும். ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகங்களும், அதன் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு, இலவச ஆரம்பக்கல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்தையும் அளிக்க வேண்டும் என்பது அதன் கடமையாகும். ஆனால், அதற்கு நேர் எதிராக கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகமானது பள்ளி மேம்பாட்டு கட்டண வசூலை கைவிடாத நிலையில், இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்