பல்கலை துணைவேந்தர் பதவி பல கோடிக்கு விற்பனை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் பல கோடிக்கு விற்கப்பட்டதா என்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை அமைக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாபின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளை ஆளுநர்கள் தான் நிரப்புகின்றனர். அவ்வாறு இருக்கையில் முன்னாள் ஆளுநரே துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறுவது வேதனையாக உள்ளது. துணைவேந்தர் பதவிகள் விற்கப்படும் போது மவுனமாக இருந்து விட்டு தற்போது குற்றம் சாட்டுவது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கிறது. அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர்கள் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், தற்போது துணை வேந்தர் பதவிகளும் விற்கப்பட்டதாக கூறப்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பதை தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிரூபிக்க வேண்டும்.லஞ்சம் ஊழலற்ற ஆட்சியை தான் மக்கள் விரும்புகின்றனர். இதுபோன்ற ஊழல்கள் தொடர்ந்தால் கல்வியின் தரம் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் எவ்வாறு இருக்கும். துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.துணைவேந்தர் பதவிகளை நிரப்பும் ஆளுநரே குற்றச்சாட்டை முன்வைப்பது தன் மீதா அல்லது வேற யார் மீதாவது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்பதை உரிய ஆதாரத்துடன் பன்வாரிலால் புரோகித் நிரூபிக்க வேண்டும். மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தீபாவளி நேரத்தில் அணுகுண்டு வெடித்தது போல் பன்வாரிலால் புரோகித்தின் குற்றச்சாட்டு உள்ளது. வேலியே பயிரை மேய்ந்ததா என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்