பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் காக்களூர் ஏரியில் கரைப்பு: ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன

 

திருவள்ளூர், செப்.10: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 4 உட்கோட்டங்களில் மொத்தம் 909 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் திருவள்ளூர் மற்றும் திருப்பாச்சூர், எடப்பாளையம், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 35 விநாயகர் சிலைகள் நேற்று திருவள்ளூர், ஆயில் மில் பகுதியில் இருந்து ஊர்வலமாக டிராக்டர்கள், மினி லாரிகள் போன்ற வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. பிறகு அங்கிருந்து விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைகளின்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்று காக்களூர் ஏரியில் கரைத்தனர்.

இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், தேரடி, காக்களூர் சாலை வழியாக காக்களூர் ஏரிக்குச் சென்றது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள் தலைமையில் டிஎஸ்பிக்கள் தமிழரசி, கந்தன், இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின், வெற்றிச்செல்வன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்