பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்தாலம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பரபரப்பு

பண்ருட்டி, ஆக. 22: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்தாலம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தாண்டு சித்தரை மாதம் திருவிழா நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவிட்டார்.இதற்கிடையில், கடந்த 17ம் தேதி காலை ஒரு தரப்பினர் கோர்ட் அனுமதி பெற்று திருவிழா நடத்த பந்தக்கால் நட்டனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. திருவிழா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றியும், கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட் அனுமதியுடன் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாரும் தடுக்க கூடாது. கோர்ட்டை அணுகி, கோர்ட்டு மூலம் தீர்வு காண வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை முத்தாலம்மன் கோயில் திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழா ஊர் பொதுவில் நடத்தப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதனால் இருதரப்பினருக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பிகள் சபியுல்லா,ராஜா தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். பின்னர் கோயில் முறைப்படி திருவிழா ஏற்பாடுகள் நடந்தது. பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், தொடர்ந்து கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி