பலத்த காற்றால் மின்கம்பி அறுந்து விழுந்தது நெல்லை அண்ணா சாலை திடீர் மூடல்

நெல்லை, ஜூலை 29: நெல்லை அண்ணா சாலையில் காற்று காரணமாக மின்சார லைன் திடீரென்று அறுந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த வழியாக ேபாக்குவரத்து தடை செய்யப்பட்டு, அண்ணா சாலை மூடப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது. நெல்லை புதிய பஸ்-ஸ்டாண்டிலிருந்து வரும் அரசு பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், நெல்லை செல்லப்பாண்டியன் மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக பயணித்து, பிஎஸ்என்எல் அருகே அமைந்துள்ள அண்ணா சாலையில் திரும்பி மாவட்ட அறிவியல் மையம் சமீபம் இணையும் கொக்கிரகுளம் சாலையை தொட்டு தாமிரபரணி ஆற்றுப் பாலம் வழியாக சந்திப்புக்கு சென்றன. இதன் மூலம் வண்ணார்பேட்டை – செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானா போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக சந்திப்புக்கு சென்றன. இதனால் அண்ணா சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று மதியம் 12.15 மணிக்கு கடும் காற்று காரணமாக அண்ணா சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் அருகே மின்சார லைன் அறுந்து நடுரோட்டில் விழுந்தது. இரண்டு புறமும் மின்சார லைன் அறுந்து நடு ரோட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. லைன் அறுந்து விழுந்த போது வாகனங்கள் அதிகம் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு மின் சப்ளை நிறுத்தப்பட்டது. அப்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அண்ணா சாலை இரு புறங்களிலும் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வண்ணார்பேட்டை ரவுன்டானா வழியாக திருப்பி விடப்பட்டது.

இதன் மூலமாக தான் கலெக்டர் அலுவலகம், வடக்கு, தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதால் உதவி செயற்பொறியாளர்கள் சங்கர், சிதம்பரவடிவு, உதவி பொறியாளர்கள் வண்ணார்பேட்டை மனோகரன், சந்திப்பு உமா மகேஸ்வரி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்று இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க செயற்பொறியாளர் உத்தரவிட்டார். அறுந்து கிடந்த மின்சார லைனை இரண்டு மணி நேரத்தில் மின் வாரிய ஊழியர்கள் சீரமைத்து சீரான மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டது. அண்ணா சாலை திறக்கப்பட்டு போக்குவரத்தும் சீரானது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்