பருவ மழை முன்னெச்சரிக்கையாக கேப்டன் கால்வாயை தூர்வாரும் பணி தீவிரம்

 

பெரம்பூர், செப்.2: வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பு கால்வாய்கள் மற்றும் கூவம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கால்வாய் மற்றும் எம்கேபி நகர் பகுதியில் உள்ள கேப்டன் கால்வாய் ஆகியவைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்ற ேகாரிக்கை எழுந்தது.

அதன்பேரில், மாநகராட்சி வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் விஸ்வநாதன், 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, பொறுப்பு செயற்பொறியாளர் ஹரிநாத் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட கால்வாய்களை பார்வையிட்டு உடனடியாக இந்த கால்வாய்களை சுத்தப்படுத்தும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக கொடுங்கையூர் கால்வாய் மற்றும் எம்கேபி நகர் கேப்டன் கால்வாய் ஆகிய 2 கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் செடிகொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி