பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க வசதியாக தமிழகத்தில் முதற்கட்டமாக 192 இடங்களில் தடுப்பணைகள்: மழைக்காலம் முடிந்த பின்னர் பணிகளை தொடங்க தீவிர நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் நீராதாரங்களை முறைப்படி பயன்படுத்தி அவற்றை பாதுகாக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கடந்த 2021-22ம் ஆண்டில் நிதி நிலையில் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் உபரி நீரை கணிசமான அளவில் தேக்கி வைக்க முடியும். மேலும், விவசாய வளர்ச்சி மற்றும் நிலத்தடி நீரை வருங்கால தேவைகளின் பொருட்டு அதிகமான மேற்பரப்பு நீரை சேமித்து வைத்து பாதுகாத்தல், தூய நீர் நிலத்தில் உட்புகுதல் மூலம் நிலத்தடி நீரின் தரத்தினை உயர்த்துதல் போன்ற தேவைகள் நிறைவடைகின்றன. மண் அரிப்பு, வெள்ளத்தை கட்டுபடுத்துதல், கோடைகாலங்களிலும் மண்ணிற்கு ஈரப்பதத்தை வழங்கமுடியும். இதற்காக, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திட்டம் மற்றும் உருவாக்கம் தலைமை பொறியாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் மாநிலம் முழுவதும் தடுப்பணை அமைக்க வேண்டிய இடங்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து, தடுப்பணை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த அறிக்கையில் 0.5 டிஎம்சி முதல் 1.5 டிஎம்சி வரை சேமித்து வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 192 இடங்களில் தடுப்பணை அமைக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை பணிகளுக்காக தமிழக நிதித்துறை சார்பில் நிதி விடுவிக்கப்பட்டவுடன் டெண்டர் விடப்பட்டு நீர்வளத்துறை சார்பில் அடுத்தாண்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பருவமழை காலம் என்றாலும் நிதி ஒதுக்கீடு செய்தால் டெண்டர் விடும் பணிகளை முடிப்பதில் எளிதாக இருக்கும் என்பதால், நீர்வளத்துறை சார்பில் நிதியை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக நீர்வளத்துறை சார்பில் தடுப்பணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை முடுக்கி விட திட்டமிட்டுள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக பல நூறு டிஎம்சி வீணாக கடலில் கலந்துள்ளது. இதில், நீரை தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீர் உயருவது மட்டுமின்றி பாசனத்துக்கு பயன்படும் பகுதிகளை கண்டறிந்து அதற்கேற்ப இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பருவமழை காலங்களில் உபரி நீரினை கணிசமான அளவில் தேக்கி வைத்து பாசன மற்றும் நிலத்தடி நீரினை செறிவூட்டுதலுக்கு பயன்படுத்திட நிலத்தடி நீர்த்தேக்கங்கள், கதவணைகள் போன்றவை தொழில் நுட்ப சாத்தியமான மாற்று வழியாக உள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சாத்தியமான இடங்களில் தொடர் தடுப்பணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு