பருவமழை காலம் துவங்க உள்ளதால் மீன்களை உலர வைத்து கருவாடாக்கும் பணி தீவிரம்

சாயல்குடி: மழை காலம் துவங்க உள்ளதால் விற்பனை, ஏற்றுமதி,கோழி தீவனம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும் கருவாட்டிற்கு, மீன் துண்டுகளை உலர வைத்து கருவாடு ஆக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதி என்பது ராமேஸ்வரம், தனுஷ்கோடி முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு 21 சிறிய குட்டி தீவுகள் உள்ளன. இவை மீனவர்களுக்கும், மீனவ கிராமங்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குவதால் மீன்பிடித்தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு 104 வகை பவளபாறைகள், டால்பின், கடல்குதிரை, ஆமை, நட்சத்திர மீன்கள், கடல்பசு, கடல் அட்டை உள்ளிட்ட 3600 வகையான கடல் உயிரினங்கள், கடல் பாசிகள் உள்ளன. கிழக்கு பகுதியில் ராமேஸ்வரம், வடக்கே தொண்டி, எஸ்.பி பட்டிணம், தென்மேற்கு பகுதியில் பெரியபட்டிணம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம்,மூக்கையூர், ரோச்மா நகர் வரையிலான சாயல்குடி பகுதி வரை 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. மீனவர்கள் 1900 விசை படகுகள், 2000க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், வல்லம் போன்றவற்றில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இங்கு மீனுக்கு இணையாக கருவாடும் மக்கள் மத்தியில் விருப்ப உணவாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையே பிரதான மழையாக உள்ளது.இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்ய துவங்கும். தொடர்ந்து 5 மாதங்கள் மழை,பனி காலம் என்பதால் தற்போது கருவாடு ஆக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்காக மீனவர்கள், வியாபாரிகள் மீன்களை நன்கு கழுவி அதில் உப்பு, தேவைப்படும் குறிப்பிட்ட மீன்களுக்கு மஞ்சள் தூள் இட்டு காயவைத்து கருவாடு ஆக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விலை அதிகமாக உள்ள சீலாமீன், பால்சுறா, கனவாய் மீன்கள், விலை குறைவாக உள்ள சூடை, வாலை, நகரை மற்றும் மத்திய விலையில் உள்ள நெத்திலி, திருக்கை, பண்ணா மீன்களை கருவாடு ஆக்கி காயப்போட்டு பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கருவாடு வியாபாரி எஸ்.டி.ராஜ் கூறும்போது, மழை காலம் துவங்கும் முன் கருவாடு ஆக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீனை துண்டாக்கி, பக்குவப்படுத்தி காயவைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றிற்கு காலை நேரங்களில் சுமார் 3 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும், கூலியாக ரூ.300 கொடுக்கப்படுகிறது. கருவாட்டில் கூடுதல் விலை கருவாடு, மத்திய விலை, மலிவு விலை கருவாடுகள் என 3 வகைகள் உள்ளன.மீன்களை காட்டிலும் எல்லா நாட்களில் விற்பனை ஆவது கருவாடு, ரூ.5 பட்ஜெட்டில் ஒரு குடும்பத்திற்கு தேவையான குழம்பு வைத்து சாப்பிட்டு விடலாம். எனவே தான் கருவாட்டிற்கு எல்லா தரப்பு மக்களிடம் எல்லா நாட்களிலும் வரவேற்பு இருக்கிறது. உள்ளூர், வெளிமாவட்டம், மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், பாம்பன் சுற்றுலா பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வாங்கி செல்கின்றனர். இதில் கிலோ ஒன்றிற்கு நெய், சீலா கருவாடு ரூ.800 முதல் 1000 வரையிலும், பால் சுறா, கனவாய், மாசி போன்றவை ரூ.500 முதல் 700 வரையிலும், நெத்திலி, திருக்கை ரூ.240 முதல் 350 வரை விற்கப்படுகிறது. காரா, நகரை, பாறை, சின்ன ஊழி, அசலை, கும்லா, சாவாலை, கட்டா, முரள்துண்டு, கெளுத்தி, கார்ல், கருவாடுகள் ரூ.80 முதல் 200 வரை விற்கப்படுகிறது. இதுபோக கருவாடுகள், பேச்சாளை உள்ளிட்ட கருவாடுகள் கேரளா போன்ற வெளிமாநிலங்கள், ஈரோடு, நாமக்கல் போன்ற வெளிமாவட்ட கோழிபண்ணைகளுக்கு தீவன தயாரிப்புகளுக்கு டன் கணக்கில் விற்கப்படுகிறது என்றார். கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் இருதய நோய், சர்க்கரை, சிறுநீரகம், தைராய்டு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.பெண்களுக்கு தாய் பால் சுரப்பது, நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்னைகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. சளி, இருமல்,நோய் எதிர்ப்பு சக்திக்கு உகந்தது….

Related posts

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம்

92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்: போக்குவரத்து மாற்றம்