பருவமழைக்கு முன்பே நந்தியாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

 

திருத்தணி, ஜூலை 8: பருவமழை தொடங்க உள்ள நிலையில், நந்தியாற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஏரி நிரம்பி உபரி நீர் ஆர்.கே.பேட்டை அருகே அய்யனேரியில் நந்தியாறாக உருவாகி பின்னர் திருத்தணி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம், எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், கோரமங்கலம், அகூர், திருத்தணி, வழியாக திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் வரை சுமார் 40 கீ.மீ தொலைவு பயணித்து கொசஸ்தலை ஆற்றில் சங்கமிக்கின்றது.

நந்தியாற்றின் கரைப்பகுதியில் சுமார் 1000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக நீர்வளத்துறையினர் நந்தி ஆற்றை முறையாக பராமரிக்காததால், ஆற்றின் கரைப்பகுதி, நீரோட்டப் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், ஆற்றில் முட்செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், மழை காலங்களில் வெள்ள நீர் சரிவர செல்ல முடியாமல் நீரோட்ட பாதையில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெற முடியாமலும், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள் நந்தி ஆற்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு ஆற்றில் நீரோட்டப் பாதையில் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி மணல் திட்டுக்களை சீரமைக்க வேண்டும் என்று நந்தியாறு கரைப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை