பரமத்திவேலூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் தலா ₹25 ஆயிரம் அபராதம்

பரமத்திவேலூர், ஜூன் 29: பரமத்தி வேலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து தலா ₹25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். பரமத்திவேலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மளிகை கடைகள் மற்றும் டீ கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பரமத்திவேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் குப்பிச்சிபாளையம், வேலூர் பழைய பைபாஸ் சாலை, பொத்தனூர் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 கடைகளுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் மொத்தம் ₹1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பூட்டி சீல் வைத்தனர். மீண்டும் குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்தனர்.

Related posts

காரில் கடத்திய 146 கிலோ போதை பொருள் பறிமுதல்

காட்டு முயலை வேட்டையாடிய இளைஞர் கைது

குமரியில் மீண்டும் சாரல் மழை