பரமத்திவேலூர் அருகே 2 முட்டை லாரிகளில் ₹16.39 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே 2 முட்டை லாரிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ₹16.39 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாகனங்களில் ₹50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்களின்றி எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரியாற்று பாலம் அருகே இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நைனாமலையை சேர்ந்த ஆனந்தன் (35), என்.புதுப்பட்டியை சேர்ந்த பழனியாண்டி (45) ஆகியோர் ஓட்டி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு லாரியில் ₹8 லட்சத்து 98 ஆயிரமும், மற்றொரு லாரியில் ₹7 லட்சத்து 41 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு முட்டை லோடுகளை ஏற்றி சென்று இறக்கி வைத்துவிட்டு அதற்கான பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ₹16.39 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்