பரமக்குடி அருகே கண்மாயில் மீன் பிடித்த கிராம மக்கள்

 

பரமக்குடி, ஜூலை 31: பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம் நடைபெறுகிறது. நெல், மிளகாய் அறுவடை பணிகள் முடிவுற்று கோடை காலம் துவங்கி வெயில் வாட்டிவதைக்கும் நிலையில் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இலவசமாக மீன்களை பிடித்து செல்ல பாம்புவிழுந்தான் கிராம மக்களுக்கு அறிவிப்பு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று 100 க்கும் மேற்பட்டோர் காலை முதலே இருசக்கர வாகனங்களில் வந்து கண்மாய் சுற்றி கரையோரங்களில் காத்திருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைக்க கரை ஓரங்களில் நின்றிருந்த மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்த ஊதா, கச்சா, தூரி, வலை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி போட்டி போட்டு மீன் பிடித்தனர்.

இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிகளவில் கிடைத்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை போட்டி போட்டு மீன்பிடித்ததில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 2 கிலோ முதல் 3 கிலோ வரை மீன் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியோடு மீன்பிடித்து திரும்பி சென்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாம்புவிழுந்தான் கிராம கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு