பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 3.5 மடங்கு கூடுதல் இழப்பீடு: வீடு கட்ட இடம், பணம் தரப்படும்; தகுதி அடிப்படையில் அரசு வேலை; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும்போது மார்க்கெட் மதிப்பைவிட 3.5 மடங்கு கூடுதலாக பணம் கொடுத்து, அவர்களுக்கு வீடு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு செய்து தரும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். இதுகுறித்து தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 4 கி.மீ. தூரத்தில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. முதல்கட்டமாக நிலம் எடுப்பு பணிகளில் அரசு இறங்கி உள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள நிலையில், அங்குள்ள 13 கிராம மக்களிடம் பேசினோம். அப்பகுதி மக்கள் மார்க்கெட் மதிப்பை விட நிலத்துக்கு கூடுதல் பணம் வேண்டும், வேலைவாய்ப்பு வேண்டும் என்றார்கள். ஏகநாதபுரம், பரந்தூரில் பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே விமான ரன்வேயை மாற்றி அமைக்க முடியுமா. அதன் மூலம், 500 வீடுகள் பாதுகாக்கப்படும் என்றார்கள். இதுபற்றி துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசுவதாக கூறியுள்ளோம். பெரும்பான்மையான மக்களின் கருத்தாக நிலம் விலை மற்றும் மாற்றுவீடு கோரிக்கை உள்ளது. அதை நேரடியாக எங்களிடம் சொன்னார்கள். அரசாங்கத்தை பொறுத்தவரை, முதல்வர் விவசாயிகளுக்கு உதவுகின்ற அடிப்படையில்தான் அந்த பணிகளை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். விவசாயிகள் எந்த காலத்திலும் பாதித்துவிடக் கூடாது என்ற நிலையில்தான் அரசு இருக்கிறது. தமிழகத்தில், ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வருகிறபோது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேறு வழியே இல்லை. சென்னையில் விமான போக்குவரத்து அதிகரிப்பதன் மூலம் அன்னியசெலாவணியை ஈட்ட முடியும், பொருளாதாரத்தில் வளர முடியும் என்பதே அனைவருடைய கருத்து. தற்போது,  மீனம்பாக்கம் விமான நிலையம் என்பது 2029ம் ஆண்டோடு அதன் முழு கட்டுப்பாடும் முடிந்துவிடுகிறது. கார்கோவை (சரக்கு) நாம் பயன்படுத்துவதாக இருந்தாலும், போக்குவரத்துக்கான விமானங்களை 2029ம் ஆண்டுக்கு பிறகு செயல்படுத்த முடியாது. ஆனால், பெங்களூர், ஐதராபாத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது அதனுடைய வளர்ச்சி கூடுதலாகிக் கொண்டே போய்க்கொண்டு இருக்கிறது. மும்பையில் கூடுதலாக 2 விமான நிலையம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது நமக்கு இன்னொரு விமான நிலையம் அவசியம் தேவைப்படுகிறது. அரசின் சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக்கொண்டு புதிதாக விமான நிலையம் அமைக்க நாங்கள் 11 இடங்களை சுற்றிப் பார்த்தோம். கடைசியாக இதில் 4 இடங்களை தேர்வு செய்தோம். படாளம், பன்னூர், திருப்போரூர், பரந்தூர் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அப்போது அரசுக்கு வந்த சிக்கல் என்னவென்றால், திருப்போரூர், படாளம் பக்கத்தில் கல்பாக்கம் இருக்கிறது. அங்கு அணுமின் நிலையம் இருக்கும் காரணத்தினால் அனுமதி கிடைக்காது. பக்கத்தில் தாம்பரத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையம் இருப்பதால் அனுமதி கிடைக்காது.அதற்கு பிறகு பரந்தூர் அல்லது பன்னூரில் ஒரு இடம் தேர்வு செய்ய நினைத்தோம். பன்னூரில் அதிகமான குடியிருப்புகள் பாதிக்கப்படுகிறது. ஆனால், பரந்தூரில் குறைந்த அளவு குடியிருப்புகள் மட்டுமே உள்ளது. அதனால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அரசாங்கம் சார்பில் நிலத்தை கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே அவர்கள் நிலத்துக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என்று கேட்டார்கள். அரசாங்கம் சார்பில் வருவாய் துறையினர் நில மதிப்பீட்டை ஒப்பீட்டு பார்த்து, வருவாய் துறை மூலம் நிலத்தை கையகப்படுத்தும்போது இப்போது இருக்கிற நிலம் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட சந்தை மதிப்பைவிட 3.5 மடங்கு கூடுதலாக பணம் கொடுக்க அரசாங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்ல, விமான நிலையம் அமையும் சுற்றுவட்டாரத்திலேயே அவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து, அந்த கிராம மக்களுக்கு அந்த இடம் ஒப்படைக்கப்படும். அது மட்டுமல்ல, அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலத்திற்கான பணத்தையும் கொடுக்கப் போகிறோம். அவர்கள் வீடு கட்ட இடம், தனியாக பணமும் தரப் போகிறோம். குறிப்பாக, மாடபுரம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊர் மக்களை ஒரே இடத்தில் குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நாட்டார் பதவியுடன் அவர் தொடர்வார். இந்த அரசாங்கம், மக்கள் யாரையும் வேறுபடுத்தி பார்க்காது. மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் இதில் அரசாங்கம் ஈடுபட்டு இருக்கிறது. சென்னை மைய பகுதியில் இருந்து விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் போக வேண்டும் என்றால் காலையில் 5 மணிக்கு போனால் 15 நிமிடத்தில் போக முடிகிறது. அதேநேரம் காலை 11 மணிக்கு போனால் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. அதனால், சென்னையில் உள்ள நெரிசலையும் குறைக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் புதிய விமான நிலையத்தை கொண்டுவர வேண்டும் என்று அரசு கருதுகிறது. விவசாயிகளை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காகவோ, அவர்களை துன்புறுத்த வேண்டும் என்பதற்கான நோக்கமே அல்ல. பரந்தூர் பகுதியில் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும்போது, அங்குள்ள மக்களின் மனம் நிறைவடையும் வகையில் இந்த அரசாங்கம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.அந்த பகுதி மக்களுக்கு தேவையான வாழ்வாதாரம் நிலம்தான். அவர்கள் நிலத்துக்கு பணம் கொடுத்தால் அந்த பணத்தில் இருந்து அவர்கள் வேறு இடத்தில் நிலம் வாங்கிக் கொள்ள போகிறார்கள். அடுத்து, அந்த 13 கிராமத்தில் எத்தனை பேராக இருந்தாலும் சரி, தகுதி அடிப்படையில் அத்தனை பேருக்கும் அரசின் சார்பாக அவர்களுக்கு வேலை வழங்கப்படும். என்எல்சியை பொறுத்தவரை, முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அந்த காலத்தில் எடுக்கப்பட்டது. தமிழக முதல்வரை பொறுத்தவரையில், என்ன சொல்கிறாரோ அதை கட்டாயம் செய்வார். அந்த வீட்டு பிள்ளைகளுக்கு கட்டாயம் இந்த அரசாங்கம் வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.அந்த பகுதியில் மொத்தமுள்ள 13 கிராமங்களில் 1,005 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. 1,005 வீடுகளுக்கும் தமிழக அரசு இடம் ஒதுக்கி தரும். 1,005 வீடுகளுக்கும் கட்டுவதற்கு பணம் தருகிறோம். அந்த வீட்டுக்கான இழப்பீடு தொகையும் வழங்கப்படும். அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் நிலத்துக்கும் 3.5 மடங்கு கூடுதல் பணம் வழங்கப்படும். 2013ம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படும். அரசாங்கத்தின் நிலமதிப்பீட்டை அடிப்படையாக வைத்து பணம் கொடுப்பது ஒரு வகை. இன்னொன்று, மார்க்கெட் மதிப்பை வைத்து பேசி கொடுப்பது ஒரு வகை. நேரடியாக உட்கார்ந்து பேசுகிறபோது, அந்த அடிப்படையில்தான் பணம் கொடுக்க போகிறோம். இந்த பணிகள் முடிந்தவுடன், எவ்வளவு இடத்தை அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளது, எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் கட்டாயம் சொல்வோம். நில மதிப்பீடு தொகை, ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கம் இடையே வேறுபடும். சர்வே நம்மருக்கு இடையேயும் இது வேறுபடும். இதனால் அங்கிருந்தவர்கள்கூட, அரசாங்கத்தில் மதிப்பீட்டு பணத்தின் அடிப்படையில் இழப்பீடு கொடுத்துவிடுவீர்கள் என்றனர். இல்லை, மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு தருவோம் என்று சொல்லி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தார். பரந்தூர் பகுதியில் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும்போது, அங்குள்ள மக்களின் மனம் நிறைவடையும் வகையில் இந்த அரசு அவர்களுக்கு உதவியாக இருக்கும்* பொருளாதாரம் வளர்ச்சி அடையும்சென்னையையொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் நீர்நிலைகள் இல்லாமல் இருக்க முடியாது. எல்லா இடத்திலும் ஏரிகள்  இருக்கிறது. விமான நிலையம் வருகிறது என்பது ஒரு பொது நோக்கு. விமான நிலையம்  இங்கு வருவதன் மூலம் பக்கத்தில் இருக்கும் பெங்களூர், ஐதராபாத்தை மிஞ்சுகிற அளவுக்கு கார்கோவை (சரக்கு) நாம் கையாளலாம். இப்போது, சென்னையை பொறுத்தவரை வந்துபோக முடியாத நிலை உள்ளது. இதையெல்லாம் அறிந்து, முதல்வர் ஒரு பொது நோக்கத்தோடு ஒரு விமான நிலையத்தை சென்னை அருகே உருவாக்குவதன் மூலம் கார்கோவை அதிகமாக கையாளலாம். அதன்மூலம் அன்னிய செலாவணியை ஈட்ட முடியும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய அது உதவியாக இருக்கும். போக்குவரத்து என்பது, தமிழ்நாட்டுக்கு வெளியில்  இருக்கிற பெரும்பான்மையானவர்கள் சென்னைக்கு வருவார்கள், போக்குவரத்து  நெரிசலை குறைக்க முடியும். இப்போது இருக்கும் நிலைமையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை என்று அமைச்சர் கூறினார்.* 4,564 ஏக்கர் நிலம் எடுக்க முடிவுவிமான நிலையம் அமையப்போகும் இடத்தில் நஞ்சை நிலம் 2,446.79 ஏக்கர். புஞ்சை நிலம் 799.59 ஏக்கர் ஆகும். அரசு புறம்பாக்கு 1,317.18 ஏக்கர். மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலம் எடுக்கிறோம். 3,246.38 ஏக்கர் தனியார் பட்டா நிலம். இந்த இடங்களை அரசியல் கட்சியினர் தற்போது பார்த்து, அங்குள்ள மக்களிடம் பேசி வருகிறார்கள். அதேநேரம், அவர்கள் மக்களை தூண்டிவிடும் வகையில் இல்லை. அரசுக்கு உதவியாக இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறோம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்