பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

புவனகிரி, அக். 18: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் தனியார் அனல் மின் நிலையம் உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கே. பஞ்சங்குப்பம் கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் நேற்று கே. பஞ்சகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென தனியார் அனல்மின் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தனியார் அனல் மின் நிலைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் ஒரு சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எட்டப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி