பயன்பாடின்றி கிடக்கும் பயிற்சி கூடங்கள்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடங்கிய யோகா பயிற்சி திட்டம்: செயல்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் உள்ள சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா பயிற்சி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பயிற்சி கூடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. இதனை செயல்படுத்த  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யோகா பயிற்சியில் ஈடுபடுவோருக்கு நோய் பாதித்தவர்களுக்கு தாக்கம் குறைவதுடன், ஹார்மோன் சுரப்பு சீராவது உள்ளிட்ட பலன்களை தருகிறது.  உடம்பும், மனதும் யோகாவால் இணைக்கப்படுவதால் அனைத்துக்குமான தீர்வாக இருக்கும்.  தொடர் பயிற்சியினால் உடலும், மனமும் வலுப்பெறும். தீரம், சுகம், ஆசனம் என்ற 3 வகையான யோகா முறைகள் உள்ளன. இதில் சூரிய நமஸ்காரம் ஒன்று, சாதாரண உடற்பயிற்சி போன்றுதான் இதுவும். சூரிய நமஸ்காரத்தில்  12 முறைகளை தொடர்ந்து கடைபிடித்தால் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைந்து உடல் சக்தி பெறும். பிராணாயாமம், மூச்சு சம்பந்தப்பட்டது, சுவாசிக்கும் மூச்சு காற்றை பொறுத்து மனதின் நிலை மாறுபடும். ஒருவர் சமஉணர்வு, இயல்பு நிலையில் இருந்தால் ஆழமாக, அமைதியாக சுவாசம்  நடைபெறும். கோபம், கவலை, ஏமாற்றம் உள்ளிட்ட உணர்வுகளின்போது சீரற்ற மூச்சு உண்டாகி மனநிலை பாதிப்படைந்து உடல் நோய் வாய்ப்படும். மனது நன்றாக இருக்க வேண்டுமானால் சுவாச மூச்சில் மாற்றம் செய்தாலேபோதும். மூச்சு காற்றை வைத்து மனநிலையை மாற்ற முடியும். இந்த பிராணாயாம மூச்சு பயிற்சி மூலம் நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா, டிபி, நுரையீரல் பிரச்னை சரியாகி விடும். அதற்கு மாறாக வலி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்னை வந்தால்  முறையாக செய்யவில்லை. தவறான முறை என்று அர்த்தம். தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மனநிலை அமைதியாக காணப்படும். ஹார்மோன்கள் சீராக சுரக்கும். உடம்பும், மனதும் உறுதி பெறும். பொதுவாக சந்தோஷம், கவலை, உற்சாகம், சோகம் உள்ளிட்ட வெவ்வேறு மன நிலைக்கு ஏற்றவாறு ஹார்மோன் சுரப்புகள் மாறுபடும். இதனால் ஹார்மோன் சுரப்பு சமச்சீர் தன்மையை இழக்கும்.அப்ேபாது அல்சர், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் காலம், தைராய்டு, இன்சுலின் பிரச்னை, உடல் எடை அதிகரிப்பு, முகத்தில் முடி வளர்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தற்போது இதுபோன்ற பிரச்னைகளால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையால் குழந்தை பேறு பிரச்னை ஏற்படுகிறது. ஹார்மோன் தொந்தரவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பெண்களுக்கு சிறுவயது முதலே அன்றாடம் காலையில் யோகா பயிற்சிகள் செய்வதை பழக்கப்படுத்தி, கட்டாயமாக்க வேண்டும்.அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் சுகப்பிரசவங்கள் அதிகம் நடக்கின்றது. முதல் குழந்தை சுகப்பிரசவம் என்றால் அடுத்த குழந்தையும் சுகப்பிரசவமாக வாய்ப்புகள் அதிகம். யோகா பயிற்சியில் இடுப்பு எலும்புகள் விரிவடையும் தன்மை பெறும். கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான பிரசவத்துக்கான இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கர்ப்பகால அச்சம், பதற்றம், மனஅழுத்தம் ஆகியவை சரியாகி விடும். ஒரு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை மூலம் பாதி நோய் சரியாகிறது என்றால் யோகா பயிற்சி மூலம் நோய் முழுமையாக சரியாகும். ஒன்றிய  அரசின் சுகாதார அமைச்சகத்தின் பிரதம மந்திரி யோகா பயிற்சி திட்டத்தின் கீழ் அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு வரும்  நோயாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டு இதற்காக  புதியதாக ஒப்பந்த முறையில் 11 யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.250 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.   ஒரு நாளைக்கு ஒரு  சுகாதார மையத்துக்கு சென்று காலை 8.30 மணி முதல் 12.30 மணிவரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இதனால் நோயாளிகளின் உடல்நிலையில் நல்லமாற்றம் ஏற்பட்டு குணமடைந்தும் வந்தனர்.கொரோனா காலங்களில் நுரையீரலை பலப்படுத்தவும் கொரோனா நோய் தாக்காமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டவும் இப்பயிற்சிகளில் நோயாளிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.  மருத்துவத்துறை நிர்வாகம் கொரோனாவை காரணம் காட்டி, கடந்த 2021ம் ஆண்டு தற்காலிகமாக இப்பயிற்சியை  நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. பிறகு இதுநாள் வரை இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு, யோகா பயிற்சி வகுப்புகளை முடக்கியுள்ளனர்.  தற்காலிக பணிக்கு வந்த யோகா ஆசிரியர்கள் ஏற்கனவே தனியார் வேலையை விட்டுவிட்டு இப்பணிக்கு வந்ததால் தற்போது வேறு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, இத்திட்டத்தை தொடர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏதேதோ காரணம் கூறி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சுகாதார மையங்களில் இதற்காக கட்டப்பட்ட யோகா பயிற்சி கூடங்கள் பயன்பாடின்றி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருபுவனைபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் கூறுகையில், எனது மகளுக்கு கை, கால் வராமல் முடக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக கேராளவில் சிகிச்சை பெற்று வந்தோம். எந்தவித முன்னேற்றமும் இல்லை.  திருபுவனை அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் அரசு சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது எனது மகளை அந்த  பயிற்சி வகுப்பில் சேர்த்தேன். பிறகு அவர்கள் கற்றுக்கொடுக்கும் யோகாசனத்தை தினமும் எனது மகள் செய்து வருவாள்.  தற்போது எனது மகளுக்கு கை, கால் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் அடைந்து, தானாக பள்ளிக்கு சென்று வந்து தற்போது பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்கிறார். ஆனால் திடீரென இந்த யோகா பயிற்சி வகுப்பை நிறுத்தியது, எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் பயிற்சி வகுப்பை தொடங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளில் யோகா கண்டிப்பாக இருக்க வேண்டும். அரசு மக்களுக்கு பயனில்லாத பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்கிறது. அதை தவிர்த்து இந்த யோகா பயிற்சி வகுப்புக்கு நிதி ஒதுக்கி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.‘யோகா பயிற்சி திட்டம் விரைவில் துவக்கம்’இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ராமுலுவிடம் கேட்டபோது, இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காக கோப்புகள் தயார் செய்யப்பட்டு செயலருக்கு கடந்த ஆண்டே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அதனால்தான் இதனை செயல்படுத்த முடியவில்லை. தற்போது மீண்டும் இந்த கோப்புகள் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை செயலர் பார்வையிட்டு மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்றார்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு