பயணம் தவிர்!

கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகளில் ஒன்று- ‘பயணத்தைத் தவிர்த்து விடுங்கள்.’ அதாவது, கொள்ளை நோய் பரவியுள்ள இடங்களுக்கு யாரும் செல்லக் கூடாது. அந்த இடங்களிலிருந்தும் யாரும் வெளியேறக் கூடாது.கலீஃபா உமர் அவர்கள் ஒருமுறை மக்களின் நிலையைக் கண்டு வருவதற்காக சிரியா சென்றார். வழியிலேயே அவருடைய தளபதிகளால் ஒரு விஷயம் சொல்லப்பட்டது.“கலீஃபா அவர்களே, சிரியாவில் ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியுள்ளது.”இப்போது என்ன செய்வது? வந்த வழியே மதீனா திரும்புவதா?  அல்லது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வதா? உமர் அவர்கள் தமது தளபதிகளிடமும் ஆலோசகர்களிடமும் கலந்து பேசினார். சிலர், “இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடருங்கள்” என்றனர். இன்னும் சிலர், “வேண்டாம்.. இது ஆபத்தான பயணம். பலரும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே திரும்பிச் செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.உமர் அவர்கள் சற்றே குழப்பத்தில் இருக்கும்போது நபிகளாரின் ஆருயிர்த் தோழர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்பவர் கூறினார்:“கலீஃபா அவர்களே, இது தொடர்பாக நபிகளாரின் அறிவுறுத்தல் ஒன்றை நான் அறிவேன். இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் அறிந்தால் அந்த ஊருக்குப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு நோய் பரவினால் அந்த ஊரைவிட்டும் வெளியேறாதீர்கள்’- இவ்வாறு நபிகளார் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.”உடனே உமர் அவர்கள் இறைவனைப் புகழ்ந்தபடி மதீனா திரும்பினார்கள்.கொள்ளை நோய் பரவுவதற்கு முதன்மையான காரணமே தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதும் மக்கள் இங்கும் அங்கும் செல்வதுதான். கொள்ளை நோய் பரவும்போது பயணங்களைத் தவிர்ப்பது போலவே சுகாதாரத்தை மேற்கொள்ளவும் இஸ்லாமிய வாழ்வியல் வலியுறுத்துகிறது.பல் துலக்குதல், கைகளை முறையாக தேய்த்துக் கழுவுதல், நாசியைத் தூய்மை செய்தல், தாடியைக் கோதிக் கழுவுதல், கால்களைக் கழுவுதல், காலணி அணிந்து வெளியே செல்லுதல், தும்மும் போதும் இருமும் போதும் வாயைக் கைகளால் மூடிக் கொள்ளுதல்,  தூங்கி எழுந்தவுடன் கைகளை நன்கு கழுவாமல் எந்தப் பாத்திரத்திற்குள்ளும் கையைவிடக் கூடாது என்று எச்சரித்தல் என நோய்த் தடுப்புக்கான ஏராளமான வழிகாட்டுதல்களை மார்க்கம் வழங்கியுள்ளது.இதில் சிறப்பு என்னவென்றால், இவையெல்லாம் “வெறுமனே வழிகாட்டுதல்” என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இவற்றைப் பின்பற்றுவது நபிவழி என்றும், அவ்வாறு பின்பற்றுவது புண்ணிய செயல்கள் என்றும், அந்தச் செயல்களுக்கும் மறுமையில் நற்கூலி உண்டு என்றும் கூறி, இவற்றை மார்க்கக் கடமைகளாகவே ஆக்கியுள்ளது.எடுத்துக்காட்டாக, தொழுகையை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு முன்பாக ஒவ்வொரு நேரத் தொழுகையின் போதும் ‘உளூ’ எனும் அங்கத்தூய்மை செய்வது கட்டாயமாகும். அங்கத்தூய்மை செய்யாமல் தொழுகையை நிறைவேற்ற முடியாது.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த சுகாதார வழிமுறை களையும், கொள்ளை நோயின் போது ‘பயணம் தவிர்த்தலை’யும் பின்பற்றி உடல்நலனையும் ஆன்ம நலனையும் நாட்டுநலனையும் பேணுவோமாக.-சிராஜுல்ஹஸன்…

Related posts

இனிய இல்லறம் மலர விட்டுக்கொடுப்போம்!

நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

நான் சபிப்பதற்கு வந்தவனல்லன்!