பம்மதுகுளம் ஊராட்சியில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம்

 

புழல்: பம்மதுகுளம் ஊராட்சியில், குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுநாயக்கன் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை ஈஸ்வரன் நகர் அருகே பொத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் தடுப்புகள் வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், ஊராட்சி தலைவர் ராஜாவை போலீசார் வரவழைத்தனர். அப்போது அவர் , ‘‘மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் சரியாக வரவில்லை. இது விரைவில் சரி செய்யப்பட்டு, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை