பனை, தேக்கு, முந்திரியுடன் படர்ந்து செழிக்கும் மிளகுக்கொடி

பண்ருட்டிக்காரரின் பக்கா ஐடியாபண்ருட்டி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பலாப்பழமும் முந்திரியும் தான். உலக அளவில் பிரசித்தம். அதையும் தாண்டி பண்ருட்டி என்றால் பாக்கும், மிளகும் கூட ஒரு அடையாளமாக மாறும் என ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார் திருமலை. பாக்கும் மிளகும் வளரக்கூடிய செம்மையான மண்வளம் இங்கு உள்ளது.செம்மண்பூமி, அதளபாதாளத்தில் கிடக்கும் நிலத்தடி நீர் என்ற நில அமைப்பு கொண்டிருப்பதால்தான் பண்ருட்டி சுற்று வட்டாரம் பலா, முந்திரி விளையும் பிரதேசமாக விளங்குகிறது. தற்ப்போது பாக்கு, மிளகை விளைவித்து சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்  பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமலை.விளைநிலத்தில் ஒரு பக்கம் தேக்கு மரங்களில் மிளகுக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. மறுபுறம் முந்திரியில் மிளகுக்கொடிகள் படர்ந்திருக்கின்றன. பனை, தென்னை, பாக்கு மரங்களிலும் மிளகுக்கொடிகள் பக்குவமாய் ஏற்றப்பட்டிருக்கின்றன. தனது காட்டை காண்பித்தவாறே பேச ஆரம்பித்தார் திருமலை.“கடந்த 2002ம் ஆண்டில் கேரளாவில் இருந்து கொண்டு வந்த மிளகுக் குச்சியை  எனது வயலில் உள்ள 4 தென்னை மரங்களுக்கு அருகே நடவு செய்தேன். அது நன்றாக வளர்ந்து தென்னை மரத்தில் கொடியாக படர்ந்தது. நடவு செய்த 3ம் ஆண்டில் இருந்து மிளகில் காய்ப்பு காய்க்க ஆரம்பித்தது. அந்த ஆண்டில் மரத்திற்கு அரை கிலோ மகசூல் கிடைத்தது. இதனால் நம்ம ஊரிலும் மிளகு பயிர் செய்யலாம் என்ற நம்பிக்கை வந்தது. இதையடுத்து தேக்கு மரத்தில் மிளகு பயிர் செய்யலாம் என முடிவெடுத்தேன். இதன்மூலம் தேக்கிலிருந்து நல்ல வருவாய் பெறலாம். கூடுதலாக மிளகு மூலமும் லாபம் பெறலாம் என திட்டமிட்டு அதை நடைமுறைப்படுத்தினேன். அதன்படி கடந்த 2015ம் ஆண்டில் வனத்துறை மூலம் கன்று வாங்கி ஒரு ஏக்கர் நிலத்தில் 10க்கு 10 அடி இடைவெயில் தேக்கு மரக்கன்றுகளை நட்டேன். தேக்கு மரத்திற்கு 8க்கு8 இடைவெளியே போதுமானது. டிராக்டர் மூலம் உழவு ஓட்டுவதற்காக இந்த இடைவெளி விட்டிருக்கேன். இதன்மூலம் உழவுப்பணிகள் எளிதாக இருக்கும். தேக்கு நட்டதிலிருந்து 2 ஆண்டுகள் கழித்து தேக்குமரத்திற்கு அரை அடி தூரம் தள்ளி மிளகுச் செடிகளை நடவு செய்தேன். மிளகு செடிகள் 3 அடி உயரம் வளர்ந்த பிறகு அதன் நுனிப்பகுதியை கிள்ளி விட வேண்டும். இதன்மூலம் பக்க கிளைகள் அதிகமாக வரும். செடி வைத்ததில் இருந்து 2 ஆண்டுகளில் மிளகுக் காய்க்க ஆரம்பிக்கும். அப்போது அவற்றை உருவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் 3ம் ஆண்டில் சிறப்பாக காய்க்க ஆரம்பிக்கும். அப்போது செடிக்கு அரை கிலோ மகசூல் கிடைக்கும். 4ம் ஆண்டில் இருந்து செடிக்கு 1 கிலோ கிடைக்கும். இப்போது அனைத்து மரங்களில் இருந்தும் நல்ல மகசூல் கிடைத்துக்கொண்டிருக்கிறது.தென்னை, தேக்கு இரண்டிலும் மிளகு நல்ல பலன் கொடுத்ததால் அடுத்ததாகவயலில் உள்ள 30 பனைமரங்களில் மிளகு தாவரத்தை ஏற்றிவிட்டேன். இது எதிர்பார்த்ததை விட சிறப்பான அளவு காய்க்கின்றது. மற்ற மரங்களில் 1 கிலோ மிளகு வெள்ளாமை கிடைக்கும் நிலையில், பனைமரத்தில் 5 கிலோ வரை மிளகு கிடைக்கிறது. பனைமரத்தின் அமைப்பு மிளகுக் கொடிகள் படர்ந்து மகசூல் கொடுக்க ஏதுவாக இருக்கிறது.பனை மரத்தின் நன்மையை உணர்ந்த நமது முன்னோர்கள்  நீர்நிலைகளின் அருகில் மண் அரிப்பை தடுப்பதற்காக அதிகளவில் பனைமரங்களை நட்டனர். எனது நிலத்தையொட்டி காக்காயன் ஓடை  ஓடுகிறது. மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அருகில் உள்ள சிதம்பரநாதன்பேட்டை, புத்திரன்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நீர் சென்று கெடிலம் ஆற்றில் கலக்கும். இந்த ஓடை நீரால் எனது நிலத்தில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க வரப்போர பனைமரங்கள் உதவிபுரிகின்றன. இதில் ஏற்றி விடப்பட்ட மிளகு செடிகள் எனக்கு கூடுதல் வருமானத்தை தருகிறது. எங்களிடம் 20 அடி உயரம் உள்ள ஏணி ஒன்று இருக்கிறது. மிளகுச்செடிகள் காய்த்து அறுவடைக்கு வந்தவுடன் பனைமரத்தில் ஏணியை சாய்த்து அதில் ஏறி மிளகுக்காய்களை கொத்து கொத்தாக பறித்து கீழே போடுவோம். கீழே தார்ப்பாய் விரித்து இந்தப் பணியை மேற்கொள்வோம். கீழே விழும் மிளகுக் காய்களை எந்த சேதமும் இன்றி எடுத்துச்சென்று காய வைத்து பதமாக்குவோம். இதற்காக அரசு மானியத்தில் சோலார் மூலம் இயங்கும் உலர் கூடத்தை அமைத்திருக்கிறோம். அதில் மிளகைகாய வைத்து வீட்டில் சேமித்து வருகின்றோம். இப்போது எனது 8 ஏக்கர் முந்திரித் தோப்பில் மிளகை பயிர் செய்திருக்கிறேன். மற்ற மரங்களில் கிடைக்கும் மகசூல் முந்திரியில் கிடைக்காது என்றபோதும் இதை செய்திருக்கிறேன். முந்திரியில் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். மிளகின் மூலம் அந்த வருமானம் கூடுதலாக கிடைக்கும் என்பதோடு, முந்திரியை நன்றாக பராமரிக்க மிளகு சாகுபடி உதவும் என்பதால் இதை ஆர்வமாக செய்கிறேன். மிளகுக்கு பாக்கு நல்ல கூட்டணி , அதன்படி கடந்த 2018ம் ஆண்டில் 5க்கு 5 அடி இடைவெளியில் வரப்பு ஓரங்களில் 2 ஆயிரம் பாக்குச் செடிகளை நடவு செய்தேன். இப்போது அந்த மரங்கள் 10 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இதற்கு இடையில் கடந்த 2020ம் ஆண்டில் மிளகையும் நடவு செய்தேன். இப்போது பூ வைக்க தொடங்கி இருக்கிறது. பாக்கும் காய்ப்பு தர ஆரம்பித்துவிட்டது. 3 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். இப்போது நன்றாகவே காய் காய்க்க ஆரம்பித்துவிட்டது. பச்சைக் காய்களாக 100 கிலோ காய்களை அறுவடை செய்திருக்கிறோம். இவற்றை காய வைத்து பாக்கை பதமாக எடுத்து விற்பனை செய்யய்ள்ளேன். இதன் மட்டைகள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. ஒரு மட்டை 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தட்டு தயாரிப்பில் இதனை பயன்படுத்துகின்றார்னகள்.  வருங்காலங்களில் பாக்கு மட்டைக்கு இன்னும் கூடுதல் விலை கிடைக்கும். வரும் காலத்தில் தட்டை நாமே செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும் அதற்கான இயந்திரம் குறைந்த விலையில் கிடைக்கின்றது ” என்கிறார். தொடர்புக்கு: திருமலை – 99765 65462.தொகுப்பு: உ.வீரமணி  படங்கள் : தனசேகர்

Related posts

நெகிழ்ச்சியான நெல் சாகுபடி!

உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 11

அதிரடி லாபம் தரும் ஆர்கானிக் பாக்கு!