பனியன் நிறுவனங்களில் ஓவர் டைம் நேரத்தை 145 மணி நேரமாக உயர்த்த கோரிக்கை

 

திருப்பூர், ஜூன் 24: கோவையில் ஜவுளித்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு தொழில்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர் காந்தியிடம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பனியன் நிறுவனங்களில் 3 மாதங்களுக்கு ஓவர் டைம் 75 மணி நேரமாக உள்ளது. இதனை 145 மணி நேரமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு உயர்த்துவதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும்.

வெளிநாட்டு ஆர்டர்களும் அதிகரித்து, வருவாயும் அதிகரிக்கும். மும்பை, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு ஓவர் டைம் நேரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், நிறுவனங்களில் சோலார் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் உற்பத்தி மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து எந்திரங்கள் வாங்குகிறவர்களுக்கு ஒன்றிய அரசு மூலதன ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

ஆனால், ஒன்றிய அரசு வழங்கினால், தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குவதில்லை. எனவே, ஒன்றிய அரசு ஊக்கத்தொகை வழங்கினாலும், மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும், திருப்பூருக்கு ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் ரூ.10 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஒதுக்கினால் அந்த நிதியின் மூலம் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை அமைக்க முடியும். இதுபோல், வீடுகள் இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Related posts

கற்பகம் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

செட்டிபாளையம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைள் திறப்பு