பந்தல் அமைக்கும் பணிகள் துவக்கம் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 23ம் தேதி கொடியேற்றம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து ஆடி மற்றும் சித்திரை வீதிகளில் பந்தல் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் மீனாட்சி, சுந்தரேசுவரர் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் ஏப்.30ம் தேதி தொடங்குகின்றன. இதன்படி அன்றைய தினம் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், மே 1ம் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 2ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். திருக்கல்யாண விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக ஆடி மற்றும் சித்திரை வீதிகளில் பந்தல் போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதேபோல் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழாவும் தொடங்குகிறது. கள்ளழகர் மதுரை வரும் வழியில் உள்ள 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்சேவையை தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோரிப்பாளையம் அருகே ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றில் பந்தல் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து