பத்து ஆண்டுகளாக அதிமுக அரசு மெத்தனம் தென்பெண்ணையாற்றில் ஓசையின்றி புதிய அணையை கட்டிய கர்நாடகா: 5 மாவட்ட தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி; சீராய்வு மனுதாக்கல் செய்ய அரசுக்கு கோரிக்கை

சேலம்: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஓசையின்றி புதிய அணையை கட்டி முடித்திருப்பது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 5 மாவட்டங்களின் பாசனத் தேவைக்கு  நீரின்றி  போகும் அபாயம் உருவாகி உள்ளது. குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி, தமிழகத்தில் ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. பெருமழைக்காலங்களில் பொங்கி பிரவாகம் எடுக்கும் காவிரி நீரானது, மேட்டூர் அணையில் சேமிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களின் பல லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு வழி வகுக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் மேகதாது என்னும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளை, அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க  கர்நாடகாவில் உற்பத்தியாகும் பெண்ணையாற்றின் குறுக்கே, ஓசையின்றி புதிய அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி வழியாக பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. தமிழகத்தில் இது தென்பெண்ணையாறு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றுநீரால் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் என்று 5 மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது புதிய அணை கட்டப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கும் நீர்வரத்து தடைபடும் நிலை உருவாகியுள்ளது. புதிய அணையானது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சியார் குப்பத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்நாடகாவின் பன்னார்கட்டா  வனப்பகுதியில் யார்கோல் என்ற இடத்தில் 10 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 430 மீட்டர் நீளம், 50மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் 165 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கிய பிறகு, எஞ்சிய தண்ணீரே தமிழக மாவட்டங்களுக்கு வரும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கு, பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்கள் காட்டிய  அலட்சியமே முக்கிய  காரணம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது: ஆற்றின் மேல்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ் பகுதியிலுள்ள மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் நீரை தேக்கும் கட்டமைப்புகளை உருவாக்க கூடாது என்று, 1892ம் ஆண்டிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அனால் இதை மீறி, பெண்ணையாற்றின் துணை நதியான மர்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை, 2011ம் ஆண்டிலேயே கர்நாடக அரசு எடுத்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதே விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், 2020ம் ஆண்டு ஜனவரி மாதம், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஏற்பாட்டில், மத்திய நீர்வள குழும தலைவர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் பிப்ரவரி 24ம்தேதி, இந்த குழுவின் கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், தங்களது வாதங்களை வலுவாக எடுத்து முன்வைக்கவில்லை. அதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும், ஒப்புக்கு மட்டுமே வாதங்களை முன் வைத்தனர். இதையடுத்து மார்ச் மாதம் கூட்டம் நடத்தி, இது குறித்து விவாதிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்குள் கொரோனாவின் தாண்டவம் தொடங்கி விட்டதால், அரசு மற்றும் அதிகாரிகளின் கவனம் திசைமாறி விட்டது. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கர்நாடக அரசு, கடந்த 10 மாதங்களில் அணையை கட்டி முடித்துள்ளது. இந்த அணை நிரம்பிய பிறகே தமிழக மாவட்டங்களுக்கு நீர் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் கடந்த காலங்களை போல், தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கும் போதிய நீர் கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறி தான். எனவே, தமிழக அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து, அணையில் நீர்தேக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு ராமகவுண்டர் கூறினார்….

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள் – நீதிமன்ற புறக்கணிப்பு

செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு